மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி! – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பங்குனி 21, 2026 Published by Natarajan Karuppiah

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணிரத்னத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 23-வது தயாரிப்பாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் ஒரு பூர்ண நீள காதல் கதையை (Romantic Drama) இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ஏற்கனவே மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் ரசூல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மணிரத்னத்துடன் இணைவதை தனது அண்மைய பேட்டிகளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சாய் பல்லவி மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடிப்பது இதுவே முதல்முறை. ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “நான் சாய் பல்லவியின் பெரிய விசிறி” என்று மணிரத்னம் வெளிப்படையாகக் கூறியிருந்தார். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது.
சமீபத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால், மணிரத்னம் மீண்டும் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
“விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், சாய் பல்லவியின் துள்ளலான திரையாளுமையும் மணிரத்னத்தின் நேர்த்தியான இயக்கத்தில் இணையும்போது, அது ஒரு கிளாசிக் படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.”
















