வாசலில் வந்து நின்ற சரக்குக் கப்பல்!
May 26, 2025 Published by anbuselvid8bbe9c60f
அதிகாலை வேளையில் கண்விழித்து கதவைத் திறக்கும் போது, வாசலில் ஒரு புது கார் நின்றால் என்னவெல்லாம் நினைப்பீர்கள்? நார்வேயில் ஒருவர் வீட்டில் ஒரு சரக்குக் கப்பலே வந்து நின்றதாம். அவருக்கு எப்படி இருந்திருக்கும்?
நார்வேயின் பைனஸெட் பகுதியில் கடற்கரையோரமாக அமைந்த ஒரு வீட்டில் ஜோகன் ஹெல்பெர்க் என்பவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டுக் காரரான ஜோஸ்டைன் ஜோர்கென்ஸன் அழைப்பு மணியை ஒலித்து, அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு சரக்குக் கப்பல் வந்து நிற்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
”அந்த கப்பல், பக்கத்தில் உள்ள பாறைப்பகுதியில் மோதி இருந்தால், நேராக வீட்டின் மீது தான் வந்து மோதி இருக்கும். ஒரு சில மீட்டர் தூர இடைவெளியில் எல்லோரும் தப்பிவிட்டோம்” என்றார் ஹெல்பெர்க்.
கப்பல் வந்து மோதும் சத்தம் கேட்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் விழித்ததாகவும் ,சத்தம் கேட்டதும் உடனடியாக ஓடி அழைப்புமணியை அழுத்தியதாகவும் ஜோர்கென்ஸன் கூறினார்.
சம்பவம் நடந்து முடியும் வரை ஹெல்பெர்க் எப்படி தூங்கிக் கொண்டிருந்தார் என்பது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ”அவர் வெளியே வந்திருப்பார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அங்கே எந்த சத்தமும் கேட்கவில்லை. பலமுறை அழைப்பு மணியை அழுத்தியும் பதில் இல்லை. தொலைபேசியில் அழைத்த போது தான் அவருடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது” என்றார் அவர்.
என் சி எல் என்னும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் பெண்ட் ஹெட்லாண்ட் கப்பல் கரையேறியதற்கான காரணங்களை ஆராய்வதாகக் கூறினார்.”இந்த சம்பவம் நடந்ததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக எங்கள் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த சம்பத்தில் எந்த பொருட்சேதமும், உயிர் சேதமும்,ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கப்பலை இயக்கிய அதிகாரி ஒருவேளை தூங்கி விட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட ஆய்வு தெரிவிப்பதாக உள்ளூர் காவல்துறை அறிவித்தது.











