Download App

மாற்றாந்தாயால் இருபது வருடங்கள் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட இளைஞர்.!

May 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் தந்தையின் இரண்டாவது மனைவியால் 20 வருடங்களாக வீட்டில் சிறை வைக்கப் பட்ட 32 வயது இளைஞர் மீட்கப் பட்டார். 
”தமது 33 வருட அனுபவத்தில் இது போன்ற மனிதாபிமானமற்ற செயலை கண்டதில்லை” என்று காவல் அதிகாரி ஒருவர் சொல்லும் அளவுக்கு மிகக் கொடூரமான முறையில்  நடத்தப் பட்டுள்ளார், பெயர் வெளியிடப் படாத இந்த இளைஞர்.
காவல்துறையினர் அவரைப் பார்த்த போது, ”மிகவும் பலவீனமான  தோற்றத்துடன் இருந்த அந்த 32 வயது வாலிபர்,  தலைமுடி காடாக வளர்ந்து சிக்கு பிடித்த நிலையில், பற்கள் முழுவதும் சொத்தையாக, அவர் பார்க்கவே மிகவும் அழுக்காக இருந்தார்” என்று தெரிவித்தனர்.
கனெக்ட்டிக்கட்டில் இருந்த அந்த வீட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டதாக வந்த அழைப்பின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர், அந்த இளைஞர் காவல்துறையினரை அழைப்பதற்காகவே நெருப்பைக் கொளுத்தி விட்டதாக அறிந்தனர். அதன் பின்னர் தான் இந்த இளைஞரைப் பற்றிய தகவல்கள் தெரிய வந்தன. 
நீண்டகாலமாகவே பட்டினி, கவனிப்பாரற்ற நிலை, கடுமையான புறக்கணிப்பு ஆகியவற்றையே அனுபவித்து மனிதாபிமானமற்ற நிலையில் அவர் நடத்தப் பட்டிருப்பது தெரிந்ததும், அவரது மாற்றாந்தாயான  கிம்பர்லி சுலிவான் வயது (56) காவல்துறையின் விசாரணை பிடியில் சிக்கினார்.
“எனக்கு என் சுதந்திரம் வேண்டும்” என்று மெல்லிய குரலில் முறையிட்ட இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப் பட்ட போது,  நெடுங்காலமாக அவர் பட்டினியாக இருப்பதால், 5 அடி 9 அங்குல உயரமான அவரது உடல் எடை வெறும் 31 கிலோகிராம் மட்டுமே இருந்தது.  உடல் சதைப்பிடிப்பே இல்லாமல், மிகவும் நலிந்த நிலையில் இருந்ததாகவும்,  தீவிர மன அழுத்தம் மற்றும் பிஎஸ்டிடி என்னும் மனநோயாலும் அவர் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பத்து வயது வரை மட்டுமே தான் பள்ளிக்குச் சென்றதாகவும் அதன் பின், வீட்டிலேயே பாடங்களைக் கற்றுக் கொண்டதாகவும் கூறும் இவர் 14 வயதிற்குப் பின்  தான்  வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை என்கிறார். தினமும், இரண்டு சாண்ட்விச்சும் இரண்டு சிறிய பாட்டில் தண்ணீரும் மட்டுமே தனக்கு உணவு என்றும் காலையில் 15 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை வெளியில்  வந்து வீட்டுவேலைகளை செய்ய தனக்கு அனுமதி உண்டு என்றும் அதன் பின் தனது சிறிய அறையில் தான் அடைக்கப் பட்டு விடுவதாகவும் அவர் கூறினார்.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்த கிம்பர்லி சுலிவான் வாட்டர்பெர்ரி உச்சநீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் ஆஜராகி 3 லட்சம் டாலர் பணத்தைச் செலுத்தி பெயிலில் வெளியே வந்துவிட்டார்.
இருபது வருடங்களாக ஒரு இளைஞர் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருந்த தகவல் ஏன் வெளியே தெரியவில்லை என்று காவல்துறை திகைக்கிறது.
ஸேஃப் ஹேவன் என்னும் சேவை அமைப்பு அந்த இளைஞருக்கு தங்க இடம் அளித்து, அவருக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று பலரும் தாராளமாக நன்கொடை அனுப்பி வருகின்றனர். 
நன்கொடையாக வரும் பணம் அவரது மருத்துவச் செலவுக்கும் , தங்குமிடம், மனநல சிகிட்சை, மற்றும் சட்டரீதியான செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று சேவை அமைப்பு தெரிவித்தது. 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.