Download App

வைரத்தை விழுங்கிய பலே திருடன்: நூதனக் கொள்ளை!

May 27, 2025 Published by anbuselvid8bbe9c60f

ஃப்ளோரிடாவில் ஓர்லாண்டோ காவல் துறையினர் 7 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள வைரங்களை விழுங்கி திருட முயன்ற ஒரு நபரை கைது செய்தனர்.  

ஜேத்தன் கில்டர் என்ற 32 வயது இளைஞர்,  ஒரு வணிக வளாகத்தில் உள்ள டிஃபானி அன் கோ ஸ்டோரில் நூதனமான முறையில் வைரநகைத் திருட்டில்   ஈடுபட்டதாக,  கைது செய்யப் பட்டார். அதற்கு சற்று நேரத்துக்கு முன், கம்பீரமாக கடைக்கு வந்த ஜேத்தன் கடை ஊழியர்களிடம் தாம் ஓர்லாண்டோவிலுள்ள ஒரு மாஜிக் நிபுணருக்காக வைரநகை வாங்க வந்ததாகக் கூறியுள்ளார்.  கடை ஊழியர்களும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று 5  லட்சத்து 87 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள வைர மோதிரத்தையும்,  முறையே 6 லட்சத்து 9 ஆயிரம் டாலர்கள் மற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள  வைரக் கம்மல்களையும் காட்டினார்கள்.    பொருட்களுக்கு பணம் கொடுக்கும்  நேரம் வந்த போது, கில்டர் நகைகளை எடுத்துக் கொண்டு, அவரது இருக்கையிலிருந்து எம்பி குதித்து ஓடியதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். முரட்டுத் தனமாக கதவுகளைத் தள்ளி திறந்து கொண்டு ஓட முயன்ற அவரை கடைச் சிப்பந்தி பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில்  வைர மோதிரம் அவர் கையிலிருந்து விழுந்து விட்டது. ஆனால், கம்மல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  வெளியே ஓடிய அவர்  காரில் ஏறி போய் விட்டார்.  ஆனால், வாஷிங்டன் எல்லையில் புலனாய்வு துறையினர் அவரது காரை அடையாளம் கண்டு வளைத்துப் பிடித்தபோது  தான் நடந்தது  அந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.  ஒர்லாண்டோ காவல்துறையினர் இது பற்றிக் கூறுகையில், “அவரை பிடிக்க முயன்ற போது, கையிலிருந்த திருடியப் பொருட்களை வாயில் போட்டு விழுங்கியே விட்டார்” என்றனர். 

சிறைச்சாலையில் ஸ்கேன் செய்யப் பட்ட கில்டரின் உடலில் சில “வித்தியாசமான பொருட்கள்” இருப்பது கண்டறியப்பட்டது. அவை அவரது உடலை விட்டு வெளியேறிய பின் அவை திருடப் பட்ட வைர நகைகள் தானா என சோதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ”என் வயிற்றிலிருக்கும் பொருளுக்காகவா என்னை சிறையில் அடைக்கிறீர்கள்? நான் அவற்றை ஜன்னல் வழியாக வெளியே எறிந்திருக்க வேண்டும்” என்று கில்டர் சொன்னதாக தெரிய வருகிறது.  கில்டர் மீது முதல் நிலை பெரும் திருட்டு மற்றும் கொள்ளைமுயற்சி போன்ற குற்றங்கள் சாட்டப் பட்டுள்ளன. கில்டர் இதற்கு முன்பும், இதேபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில், டெக்சாஸில் உள்ள மற்றொரு டிஃபானி & கோ. கடையில் திருடியதாக அவர் கைது செய்யப்பட்டது மட்டுமின்றி,  கொலராடோவில் 48  “ஆஜராகத் தவறிய” வாரண்டுகள் அவர் மீது இருந்தன என்று யு. எஸ். ஏ டுடே தெரிவித்துள்ளது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.