Download App

3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கல்லறைகள் கண்டுபிடிப்பு.

May 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

எகிப்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மூன்று பழமையான கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகள் கிமு 1550  ஆண்டில் எகிப்தில் இருந்த புதிய ராஜ்ய காலத்தைச் சேர்ந்தவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
எகிப்தின் தென்பகுதியில் லக்ஸர் நகரத்தில் உள்ள அபு எல்-நாகா நெக்ரோபொலிஸ் என்ற மயானத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த கல்லறைகள் மிக முக்கியமான எகிப்திய அதிகாரிகளுடையவை என்று தெரிய வருகிறது.  இந்த கல்லறைகளில் அந்த அதிகரிகளின் பெயர்களும், அவர்களுடைய பதவி, பட்டங்களைப் பற்றிய குறிப்புகளும் பொறிக்கப் பட்டிருப்பதாக நிபுணர்கள் அறிவித்தனர். 
”இந்த பழம் பெரும் எகிப்திய ஆளுமைகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,  மற்ற கல்வெட்டுகளையும் நாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” என்று எகிப்தின் உச்ச தொல்பொருள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது இஸ்மாயில் காலித் கூறினார்.
சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை இந்த கல்லறைகளில் கண்டுபிடிக்கப் பட்ட பழமையானப் பொருட்கள் மற்றும் சிலைகளின் படங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் மிகவும் சிதிலமைந்த நிலையில் உள்ள கல்லறை, பேரரசர் ராம்சேஸ் காலத்தைச் சேர்ந்த அமும்-எம்-லபெட் என்னும் அதிகாரியினுடையது என்று தெரிய வந்துள்ளது.
மற்ற இரு கல்லறைகளும் 18 ஆம் எகிப்திய வம்சத்தைச் சேர்ந்த ”பகி” மற்றும் “எஸ்” என்று குறிக்கப் பட்டுள்ள  அதிகாரிகளுடையவை என்று சொல்லப் படுகிறது. ”பகி” தானியக் கிடங்கின் கண்காணிப்பாளராகவும், “எஸ்”  என்று குறிக்கப் பட்டுள்ளவர் அமுன் கோயிலின் கண்காணியாகவும், வடக்கத்தி பாலைவனச் சோலைகளின் அதிகாரியாகவும் இருந்துள்ளனர் என்று அந்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அமைச்சரான ஷெரிஃப் ஃபதிர் ’இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான அறிவியல் மற்றும் தொல்லியல் சாதனை’ என்று கூறினார். 
நாட்டின் கலாச்சாரச் சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும் காரணிகளில் தொல்லியல் முதலிடம் வகிக்கிறது என்றும் ஃபதிர் குறிப்பிட்டார். 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.