Download App

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை! போதிய ஆதாரம் இல்லை என தீர்ப்பு!

மார்கழி 8, 2025 Published by anbuselvid8bbe9c60f

dilip

மலையாள சினிமாவை அதிரவைத்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திலீப் மீது குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்தது.

2017-ம் ஆண்டு கொச்சியில் ஒரு பிரபல நடிகை காரில் சென்று கொண்டிருந்தபோது, பல்சர் சுனில் தலைமையிலான கும்பல் அவரை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் நடிகைக்கும் திலீப்புக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி இந்தச் சம்பவத்தை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 4½ ஆண்டுகளாக சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவை விரிவாக விசாரிக்கப்பட்டன. திலீப் தரப்பில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் 2018-ல் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில்: • நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை. • பிரதான குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு. அவர்களுக்கு தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தீர்ப்புக்குப் பிறகு திலீப் ரசிகர்கள் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “நீதி கிடைத்துவிட்டது” என திலீப் ஆதரவாளர்கள் உற்சாகம் தெரிவித்தனர். அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு ஒரு விதத்தில் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மலையாள சினிமாவின் முக்கிய சர்ச்சை இத்துடன் நிறைவு பெறுகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.