விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது!
தை 31, 2026 Published by anbuselvid8bbe9c60f

சுந்தர்.சி – விஷால் கூட்டணி ஏற்கனவே ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’, ‘மதகஜராஜா’ போன்ற படங்களில் வெற்றி பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘மதகஜராஜா’ பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இவர்களின் அடுத்த படம் ‘புருஷன்’ என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் அவரது மகள் அனந்திதா தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான டைட்டில் புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கலந்த காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுந்தர்.சி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) கொல்கத்தா செல்ல இருந்தனர்.
ஆனால், இயக்குநர் சுந்தர்.சிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படக்குழு வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
படத்தின் படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ரசிகர்கள் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
























