புனித அவிலா தெரசாவின் பூதவுடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டது சரியா?
May 27, 2025 Published by anbuselvid8bbe9c60f
கத்தோலிக்க சபையின் புனிதையாக கௌரவிக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புனித அவிலா தெரசா இறந்து சுமார் 440 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இன்னும் முழுவதும் அழியாத அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்ட நிகழ்வு, “ துக்க கரமான விஷயங்களில் பேரார்வத்தை( morbid curiosity)” ஊக்கப்படுத்தும் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.
110 வருடங்களுக்குப் பிறகு ஸ்பெயினிலுள்ள அல்பா டி டார்ம்ஸ் பேராலயத்தில் வெள்ளியாலான பெட்டியில் பார்வைக்கு வைக்கப் பட்ட புனிதையின் உடலை பிரமிப்பும், பக்தியும் நிறைந்த அமைதியுடன் வரிசைவரிசையாக வந்து கத்தோலிக்க விசுவாசிகள் கண்டு மரியாதை செலுத்தினார்கள்.
” இது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் துக்கத்தையும், மனநிறைவையும் அளிக்கும் அனுபவமக உள்ளது” என்றார், தமது இரு மகள்களுடம் மாட்ரிட் நகரிலிருந்து வந்திருந்த குயோமார் சான்சேஸ்.
பல வாரங்களாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த புனித அவிலா தெரசாவின் பூதவுடல் அடங்கிய வெள்ளிப் பெட்டி நேற்று முத்திரையிடப் பட்டு ஸ்பெயின் நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டது.
1582 இல் இறந்த புனித தெரசா, ஸ்பெயினில் 16 ஆம் நூற்றாண்டின் மிக சிறந்த நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அவரது ஆன்மீக வாழ்க்கை பற்றிய ஆய்வுகளும், தியானங்களும் அசாதாரணமானவை. அவை பல நூற்றாண்டுகளாக “ஆன்மீகத்தைக் குறித்த ஆழமான கண்ணோட்டமுடையவை ” என்று கருதப்படுவதாக போன்டிஃபிகல் பல்கலைக்கழகத்தின் இறையியல் பேராசிரியர் ஜோஸ் கால்வோ கூறினார்.
ஸ்பானிய சர்வாதிகாரியான ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ தனது படுக்கைக்கு அருகில் புனிதையின் கையின் நினைவுச் சின்னத்தை வைத்திருந்ததாக வதந்தி இருந்தது. மேலும் கடந்த ஆண்டு அவரது பிறந்த இடத்திற்கு வருகை தந்த புதிய போப் பதினாங்காம் லியோ உள்பட கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும் புனிதையை மிகவும் மதிப்பவர்கள்.
440 வருடங்களுக்கு முன் இறந்த புனிதையின் உடலின் முகம் உலர்ந்து மண்டையோட்டுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போலிருந்தாலும், இன்னும் முழுமையாக சிதையவில்லை. இன்னும் உடலின் சில பகுதிகளும் முழுமையாக சிதைவடையவில்லை என்று சொல்லப் படுகிறது. இதற்கு பக்தியாக வாழ்ந்த பல புனிதர்களின் உடல் அழியாமல் இருக்கும் என்று கத்தோலிக்கத் திருச்சபை நம்பினாலும், நிபுணர்கள் கல்லறையின் மிகவும் உலர்ந்த தன்மை உடல் முழுவதும் சிதையாமல் வைத்திருக்க உதவுவதாகக் கூறுகின்றனர். இதை பேராசிரியர் லூகி கப்பாஸோ’ தனித்துவம் மிக்க ஒரு இயற்கை நிகழ்வு’ என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், இந்த நிகழ்ச்சி, நீண்ட காலத்திற்கு முன் இறந்தவர்களின் உடல் பாகங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது சரியா என்ற விவாதத்தையும் தூண்டியுள்ளது.
“புனித தெரசாவின் உடலை இவ்வாறு காட்சிப்படுத்துவது நல்ல யோசனையல்ல” என்று சலமன்காவின் பிஷப் ஜோஸ் லூயிஸ் ரெட்டானா கூறினார். “இது மக்களிடம் துக்க கரமான விஷயங்களின் மீதுள்ள பேரார்வத்தை “ ஊக்குவிக்க மட்டுமே உதவுகிறது.” என்றும் அவர் கூறினார்.
ஆனால் உள்ளூர் கத்தோலிக்கத் திருச்சபையும், விசுவாசிகளும் இந்த கருத்துகளை பொருட்படுத்தவில்லை.
“புனிதர்களாக கருதப்படும் ஒவ்வொருக்கும் திருச்சபை எப்போதும் செய்யும் மரியாதை தான் இது. புதிது ஒன்றுமில்லை” என்கிறார், புனித அவிலா தெரசாவைப் பற்றி புத்தகம் எழுதிய கேத்லீன் மெட்விக் என்பவர்.











