Download App

“சிவகுமாரின் மகன் என்பதே என் வாழ்நாள் அடையாளமும் அங்கீகாரமும்” – நெகிழ்ச்சியில் சூர்யா!

மார்கழி 1, 2025 Published by anbuselvid8bbe9c60f

தந்தை நடிகர் சிவகுமாருக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் முனைவர் பட்டம் (Honorary Doctorate) வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மனம் திறந்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு சிவகுமார் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் குருசாமி சந்திரசேகரன் (சந்துரு) ஆகியோருக்கு இப்பெருமையை வழங்கினார்.

இதுகுறித்து சூர்யா வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில்,

“ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ, அதைப்போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக்கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கலையுலகின் கவனத்தைத் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு இந்த மதிப்புமிகு முனைவர் பட்டம் மிகப் பொருத்தமானது.

சிறுவனாக இருந்த காலம் தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரிடம் உறுதி, உழைப்பு, ஒழுக்கம் மட்டுமே பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட, அவரது வாழ்வியல் விழுமியங்களே என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கியிருக்கின்றன.

சிவகுமார் மகன் என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம், என் வாழ்நாளுக்கான மிகப் பெரிய அங்கீகாரம்.

எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைப் பார்க்கிறோம்.

இதே விழாவில் ஓவியர் சந்துரு (குருசாமி சந்திரசேகரன்) அவர்களுக்கும் இதே பெருமை கிடைத்திருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

இருவருக்கும் இந்த மகத்தான கெளரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்திற்கும், இச்சிறப்பை நேரில் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பிலும் தமிழ் ரசிகர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

முன்னதாக கார்த்தியும் இதே பெருமை குறித்து நன்றி தெரிவித்திருந்த நிலையில், சூர்யாவின் இந்த உருக்கமான பதிவு ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகுமார் – சூர்யா – கார்த்தி என மூன்று தலைமுறைகளாக தமிழ் சினத்தின் அன்பைப் பெற்று வரும் குடும்பத்திற்கு இது மேலும் ஒரு தங்க மயில் இறகு சேர்த்த பெருமை நாள்!

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.