ஹாலிவுட் பாணியில் உருவாகும் படம் தான் ‘பென்ஸ்’.. LCU குறித்து பாக்யராஜ் கண்ணன்..!
ஆனி 7, 2025 Published by Natarajan Karuppiah
ராகவா லாரன்ஸ் நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படம் LCU படம் தான் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஹாலிவுட் பாணியில் உருவாகி வருகிறது என்றும், சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
“லோகேஷ் கனகராஜ் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் LCUவில் பிற இயக்குனர்களும் படங்கள் இயக்கலாம் என்ற ஐடியாவை முன் வைத்தார். அந்த வகையில் தான் ‘பென்ஸ்’ படத்தில் நிகழும் சில சம்பவங்கள், LCU படங்களுடன் இணைந்து இருக்குமாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், லோகேஷ் கனகராஜ் படங்களின் முந்தைய பாகமோ அல்லது அடுத்த பாகமோ இந்த படம் அல்ல. ஆனால் இது ஒரு LCU படம் தான். இந்த படத்தின் கதை, லோகேஷ் அவர்கள் எழுதியதே. அதே நேரத்தில், நான் அதை மேம்படுத்தி திரைக்கதை எழுதி வருகிறேன்.
ஹாலிவுட்டில் ஒரே சினிமா யுனிவர்சில் பல இயக்குனர்கள் வெவ்வேறு பகுதிகளை இயக்குவது வழக்கம். அது மாதிரியான ஒரு புது முயற்சிதான் LCUவில் லோகேஷ் கனகராஜ் தவிர, மற்ற இயக்குனர்கள் படங்கள் இயக்க மேற்கொள்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் தவிர இந்த படத்தில் நிவின்பாலி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னொரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் பாக்யராஜ் கண்ணன் தெரிவித்தார்.
















