Download App

தேர்தல் முடியும் வரை விஜய் படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மனு

பங்குனி 25, 2026 Published by Natarajan Karuppiah

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால், அவரது படங்களை திரையிடவும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியான செய்யது பாபு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசியல் வருகை நடிகர் விஜய் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் போட்டியிடுகிறார். அவர் அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், முதல்வர் வேட்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்துகிறார்.

விளம்பர யுத்தி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், விஜய் நடித்த திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதும், சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும் மறைமுகமாக அவருக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரமாக அமையும்.

சமமற்ற வாய்ப்பு இது மற்ற அரசியல் கட்சி வேட்பாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்யது பாபு தனது மனுவில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ள முக்கிய அம்சங்கள்: தேர்தல் நடைமுறைகள் முழுமையாக முடியும் வரை விஜய் நடித்த பழைய மற்றும் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட தடை விதிக்க வேண்டும்.தனியார் மற்றும் அரசு கேபிள் தொலைக்காட்சிகளில் விஜய் நடித்த பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் முழுப்படங்களை ஒளிபரப்பக் கூடாது. தேர்தல் களத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கனவே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ (Jananayagan) வெளியீடு தொடர்பாக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் நிர்வாகியின் இந்த புகார் அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள் நடித்த படங்கள் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவது குறித்து பலமுறை விவாதங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செய்யது பாபுவின் இந்த மனு மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News