நீதிமன்றத் தீர்ப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி விளக்கம்,
December 20, 2025 Published by Natarajan Karuppiah

காசோலை மோசடி வழக்கில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், சமூக வலைதளங்களில் பரவி வரும் கைது வாரண்ட் வதந்திகள் குறித்தும் இயக்குநர் லிங்குசாமி தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார்.
லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்திற்காக, 2016-ஆம் ஆண்டு Paceman Finance நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தனர். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 19-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம், டிசம்பர் 19 அன்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.”

“எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் உரிய முறையில் மேல்முறையீடு செய்யத் தயாராக இருக்கிறோம்.”
“எனக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது முற்றிலும் உண்மையற்ற தகவல். இத்தகைய வதந்திகளை ஊடக நண்பர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாள் அவகாசத்திற்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதுவரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






















