“ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள்”: AI முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீலீலா உருக்கம்!
December 18, 2025 Published by Natarajan Karuppiah

தொழில்நுட்பம் வளர வளர, அதன் மறுபக்கமான தீமைகளும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. குறிப்பாக, திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகைகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்து வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் ஆகியோர் இதற்கு ஆளான நிலையில், தற்போது நடிகை ஸ்ரீலீலா இந்த விவகாரம் குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீலீலா, இது தன்னை மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்; AI மூலம் உருவாக்கப்படும் இத்தகைய அபத்தமான விஷயங்களுக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்தது போன்றே தனது சக நடிகைகளும் இத்தகைய இழிவான செயல்களால் பாதிக்கப்படுவதைக் கண்டு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ஒரு பெண்ணை வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல், சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்பதை அவர் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்:
ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக பணியாளர் என்பதை சமூகம் உணர வேண்டும்.இத்தகைய செயல்களைத் தடுப்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.”தயவுசெய்து எங்களுக்கு ஆதரவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

தொழில்நுட்பம் என்பது மனித வாழ்வை மேம்படுத்தவே தவிர, ஒருவரின் தனிப்பட்ட வாழ்வையும் கண்ணியத்தையும் சிதைக்க அல்ல என்பதை ஸ்ரீலீலாவின் இந்தப் பதிவு மீண்டும் நினைவூட்டியுள்ளது.



















