எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவி நடிக்கவுள்ளாரா? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்!
December 19, 2025 Published by anbuselvid8bbe9c60f

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய பயோபிக் திரைப்படம் உருவாகவுள்ளது. இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ போன்ற படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய் பல்லவியும் இதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், அந்த நட்பின் காரணமாகவே இந்த அணுகல் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
திரைக்கதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி (1916-2004) தனது ஏழு தசாப்தங்களுக்கும் மேலான இசைப் பயணத்தில் உலக அரங்குகளில் இந்திய கர்நாடக இசையை பரப்பியவர். ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியக் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சாய் பல்லவி தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வரும் நிலையில், இந்த பயோபிக் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.






















