Download App

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

வைகாசி 22, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”.“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

ஜி.கே.எம். தமிழ்குமரன் பேசியதாவது..,

“பரிமளா அண்ட் கோ” பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து கலைஞர்களையும் எங்களின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இந்த படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.இந்த படத்தின் முழு பொறுப்பையும் நாங்கள் பாண்டிராஜ் சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். இந்த படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் அவர்தான். அவர் உழைப்பு, அர்ப்பணிப்பு உண்மையிலேயே அபாரமானது. சமீபத்தில் பின்னணி பணிகளை பார்த்தபோது, “எப்போது படம் எடுத்தீர்கள்?” என்று பலரும் கேட்கும்படி ஆச்சரியப்படும்படி அவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.இந்த மாதிரி உழைக்கும் இயக்குநரை பார்ப்பதே கடினம். இந்த படத்தில் பணியாற்றிய முழு குழுவும், ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்திருக்கிறது. அதனால் இந்த படம் மிகவும் அழகான படைப்பாக உருவாகியுள்ளது.இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,

இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்துள்ள அனைத்து மீடியா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேடையில் பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஜெயராம் சார், ஊர்வசி அக்கா, ஹீரோயின், சாண்டி மாஸ்டர் போன்ற பல முக்கியமான கலைஞர்களுடன் நானும் உட்கார்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. “பரிமளா அண்ட் கோ” படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் சார் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். எப்படி நடிக்க வேண்டும், எப்படி அந்த காட்சியை அழகாக கொண்டு வர வேண்டும் என்று மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்தார். அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது.

சில படங்கள் ஆண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் பெண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் குறிப்பிட்ட வயதினருக்கே பிடிக்கும். ஆனால் பாண்டிராஜ் சாரின் படங்கள் என்றால் குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கும் படங்களாக இருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான குடும்ப திரைப்படம் தான் “பரிமளா அண்ட் கோ”.இந்த படம் அனைவரும் திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சார் மற்றும் தயாரிப்பாளர் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் நான் நடுவில் தான் இணைந்தேன். முதலில் என்னை தொடர்புகொண்ட ராம்கி சாருக்கு நன்றி. ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க முக்கிய காரணம் associate director திவ்யா. இந்த கதாபாத்திரத்தை பற்றி மிகவும் பொறுமையாக விளக்கி, எனக்கு இருந்த சந்தேகங்களை நீக்கி, “நீ கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்” என்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். அதற்காக ரொம்ப நன்றி திவ்யா.இந்த படத்தில் ஜெயராம் சார், ஊர்வசி மேம், மிஷ்கின் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இருப்பது தெரிந்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அவர்களுடன் எனக்கு நேரடி காம்பினேஷன் இல்லையென்றாலும், அவர்கள் இருக்கும் ஒரு புராஜக்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

ஊர்வசி மேம் எனக்கு ஒரு பெரிய ரோல் மாடல். அவருடைய சமீபத்திய interviews எல்லாம் நான் அடிக்கடி பார்ப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகையுடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஜெயராம் சார் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த நடிகர். குறிப்பாக “பஞ்ச தந்திரம்” காலத்திலிருந்தே அவருடைய கதாபாத்திரங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவருடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு ஒரு ஸ்பெஷல் மூமெண்ட்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் பிராக்ஸன். திங்க் மியூசிக் சந்தோஷ் கண்டுபிடித்த திறமையான கலைஞர். சந்தோஷ் கண்டுபிடிக்கும் திறமைகள் எப்போதும் தனித்துவமானவை என்பதால், பிரக்ஸினும் ஒரு சிறப்பான திறமை கொண்டவர் என்று நான் நம்புகிறேன். இந்த படத்திற்கு அவர் மிகவும் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் சாண்டி மாஸ்டருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சாண்டி மாஸ்டர் எனக்கு மட்டும் அல்ல, நம்ம எல்லாருக்கும் மிகவும் ஸ்பெஷலானவர். நான் சிறு வயதில் இருந்தே அவரை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர் போல, மிகவும் நெருக்கமாக பழகுவார். இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் பாண்டிராஜ் சாரின் வழக்கமான குடும்பங்கள் ரசிக்கும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.“பரிமளா அண்ட் கோ” படத்தில் இரண்டு பெரிய லெஜண்ட்ஸான ஜெயராம் சார், ஊர்வசி மேடம் ஆகியோருடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதோடு மிஷ்கின் சார் போன்ற தனித்துவமான கலைஞரும் இந்த படத்தில் இருப்பது இன்னும் ஸ்பெஷல். அவரை நான் “தலைவர்”ன்னு தான் சொல்லுவேன்.

இந்த படத்தில் எல்லாருடனும் combination scenes இருந்தது எனக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லாரையும் கலாய்த்து, சிரிச்சு, ஒரு குடும்பமாக இந்த படம் உருவானது. பாண்டிராஜ் சார் பற்றி சொல்லணும்னா, அவரோட ஸ்பீட் வேற லெவல். காலையிலே ஏழு மணிக்கு shot என்றால், ஆறரை மணிக்கே அடுத்த shot ready ஆகி இருக்கும். நாங்க இன்னும் மேக்கப் முடிக்காம இருக்கும்போதே, அவர் ஒரு shot முடிச்சு அடுத்த shotக்கு போயிருப்பார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் வேகம்.

பாண்டிராஜ் சார் படப்பிடிப்பில் எங்களுக்கு கொடுத்த சுதந்திரம் ரொம்ப ஸ்பெஷல். அதனால் சாப்பிட கூட நேரம் தெரியாமல் வேலை செய்திருக்கோம். ஆனாலும் அது கஷ்டமாக இல்ல, ரொம்ப ஜாலியான அனுபவமாக இருந்தது. மிஷ்கின் சார் உடனான தருணங்கள் கூட மறக்க முடியாதவை. இரவு நேரங்களில் அவருடைய office-க்கு போய் மியூசிக், புக்ஸ், சினிமா பற்றி பேசுவோம். அவர் கதைகள், அவர் பேசும் விஷயங்கள் எல்லாமே ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் மிஸ்டரி, காமெடி, ஃபன், எமோஷன் என எல்லாமே இருக்கும். பாண்டிராஜ் சார் இதுவரைக்கும் செய்யாத ஒரு புதிய ஜானரில் இந்த படம் இருக்கும். திருக்குமரன் சார் மிகவும் அன்பானவர் அவருக்கு என் நன்றி. “பரிமளா அண்ட் கோ” எல்லாரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கமர்ஷியல் திரைப்படம். குடும்பத்துடன் வந்து கண்டிப்பாக கொண்டாடுங்கள். நன்றி.|

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். முதலில் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தை நான் எவ்வளவு மகிழ்ச்சியாக செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். தினமும் அதை நீங்கள் நேரில் பார்த்து ரசித்திருக்கிறீர்கள். இந்த அழகான நினைவுகளை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்.

தமிழ் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒவ்வொரு உரையாடலும் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அனைவரிடமும் கருத்து கேட்டு, எல்லோரையும் சமமாக மதித்து பேசும் உங்கள் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த மேடையில் இருக்கும் நடிகர்களின் பெயர்களையே கேட்டதும் எந்த நடிகருக்கும் “நாமும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்ற ஆசை வரும். அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. முதல் முறை பாண்டிராஜ் சாரை சந்தித்தபோதே “எப்படியாவது இந்த படம் அமைய வேண்டும்” என்று மனதார விரும்பினேன். எல்லாமே மிக வேகமாக நடந்தது. படப்பிடிப்பு கூட கண் மூடி திறப்பதற்குள் முடிந்துவிட்டது போல தோன்றுகிறது. இப்போதே அந்த படப்பிடிப்பு நாட்களை மிகவும் நினைத்து வருந்துகிறேன். தினமும் வீட்டிலிருந்து கிளம்பி “பரிமளா வீட்டிற்கு” போவது போலவே உணர்ந்தேன். படப்பிடிப்பு தளம் ஒரு குடும்பம் போல இருந்தது.

ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி மேம் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். எதற்கும் உடனே நகைச்சுவையான பதில்கள் வரும். காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், பல முறை நான் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. உங்கள் இருவரின் ஜோடிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும் அதில் ஒரு சிறிய ரசிகை தான். உங்கள் பழைய காட்சிகளை சவுண்ட் இல்லாமல் போட்டாலும் வசனங்களை சொல்லும் அளவுக்கு நான் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். மிஷ்கின் சார் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே ஒரு தனி உற்சாகம் இருக்கும். அவருடனும், இங்கே இருக்கும் ஒவ்வொருவருடனும் சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

நாங்கள் இந்த படத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக உருவாக்கினோமோ, அதே அளவுக்கு நீங்கள் அனைவரும் இந்த படத்தை ரசித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். மிகவும் நன்றி.

நடிகை ஊர்வசி பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே “இந்த கதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும். இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில், நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சிலது எனக்கு பிடிக்கும், சிலது ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்தபோது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை; உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.

பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. “பசங்க” படத்திலிருந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு கதையை வடிவமைப்பதில் அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல். மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான். எப்போது தொடங்கினார்கள், எப்போது முடித்தார்கள் என்று எனக்கே ஆச்சரியம். என்னால் சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன. மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

ஒரு நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் நடிகர்களாக நாமும் அதில் improvisation செய்ய ஆர்வமாக இருப்போம். அதுதான் இந்த படத்திலும் நடந்தது. நாங்கள் இதற்கு முன் பல குடும்ப படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு காட்சியும் பழைய படங்களை நினைவூட்டும் மாதிரி இல்லை. ஒவ்வொரு காட்சியும் புதிதாகவே இருந்தது. அனந்திகா, சஞ்சனா ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் இயல்பான அனுபவமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்ற உணர்வே மறந்து, ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.

மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இந்த படத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர், அதிலும் குறிப்பாக அவரது நகைச்சுவை டைமிங் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கும் எனக்கும் சேர்ந்த சில காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்த படத்தின் casting மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் பாண்டிராஜ் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். டிரெய்லரில் ஒரு சிறிய பெண் கதாபாத்திரம் வரும். அவரை பார்த்தாலே அது தெரியும். சினிமாவின் மாயம் அப்படித்தான் — யார் எப்போது அறிமுகமாகி எவ்வளவு உயரம் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.

நடிகர் ஜெயராம் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை நண்பர்கள், என் நண்பர்கள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே அனைவரும் நிறைய விஷயங்கள் பேசிவிட்டார்கள். நேரமும் ஆகிவிட்டதால் சுருக்கமாக பேச விரும்புகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இந்த சிறிய படத்துடன் இணைந்தது மிகப்பெரிய விஷயம். அதன்பிறகு தமிழ் குமரன் சார் போன்ற தயாரிப்பாளர் இந்த படத்திற்குள் வந்தது, பாண்டிராஜ் சார் இயக்கம் ஏற்றது — இவை அனைத்தும் இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.

அதோடு ஊர்வசி மேம், சஞ்சனா, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின் சார், சிங்கம்புலி, சாண்டி மாஸ்டர் என பல சிறந்த கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்தனர். தொழில்நுட்பக் குழுவிலும் பிராக்ஸன் போன்ற இசையமைப்பாளர், பிரதீப் போன்ற எடிட்டர், ஜார்ஜ் போன்ற ஒளிப்பதிவாளர், திவ்யா போன்ற அசோசியேட் இயக்குநர் ஆகியோர் கிடைத்தது இந்த படத்தின் அதிர்ஷ்டம். இந்த அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் உண்மையான ஹீரோ எங்களுடைய திரைக்கதை தான். முதன்முதலாக பாண்டிராஜ் சார் இந்த கதையை சொல்ல ஆரம்பித்தபோது, பாதி கதை கேட்கும் முன்பே இது ஒரு ஸ்பெஷலான படம் என்று எனக்கு தோன்றியது. இந்த படத்தில் நடந்த எல்லா விஷயங்களும் மிகவும் பாஸிடிவாக அமைந்திருக்கிறது. இனிமே இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவை. மிக்க நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். “சிறந்த நடிகர்கள்” என்று சொன்னால் என் மனதில் முதலில் தோன்றுபவர்கள் ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மா. அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவு. இருவரும் மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழமான உணர்வும் கொண்ட நடிகர்கள். அவர்களுடன் ஒரே காட்சியில் இருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முன்னதாக ஒரு படத்திற்காக ஜெயராம் சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தேன். நான் கதையை மிகவும் தீவிரமாகச் சொன்னேன். அவர் அமைதியாக முழுக்கக் கேட்டுவிட்டு சிரித்தபடி, “நான் செய்யலாம் தம்பி” என்றார். அந்த ஒரு வார்த்தையே எனக்கு பெரிய ஆச்சரியம் கொடுத்தது.

ஏன் அவர் பெரிய நடிகர் தெரியுமா? வாழ்க்கையில் “இல்லை” என்று சொல்ல வேண்டிய இடத்தில் அதைத் தெளிவாக சொல்லத் தெரிந்தவர். சினிமாவில் பலருக்கு அது முடியாது. எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது ஒரு பெரிய குணம். ஜெயராம் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது.

ஊர்வசி அம்மா பற்றி என்ன சொல்ல வேண்டும். நான் அவரை மிகவும் கவனித்து பார்த்திருக்கிறேன். ஒரு காட்சியை சொன்னாலே அதை அவர் தன்னுடைய அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்வார். அவருடைய நடிப்பில் ஒரு அதிசயமான இயல்பு இருக்கிறது. அதை கற்றுக்கொடுக்க முடியாது. “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் கமல் சார் மற்றும் ஊர்வசி அம்மா நடித்த அந்த படிக்கட்டு காட்சி — இந்திய சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த காட்சி அது. நான் அந்த காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஒரு நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை விட, எதிரில் இருப்பவர் அதற்கு எப்படி பதிலளிக்கிறார் என்பதுதான் உண்மையான நடிப்பு என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பை ஊர்வசி அம்மா கொடுத்திருக்கிறார். நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன் என்று கேட்டால், அந்த மாதிரியான காட்சிகள்தான் காரணம் என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு பெரிய நடிகையுடன் வேலை செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். “பரிமளா அண்ட் கோ” கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு “பரிமளா ஃபேமிலி” என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். “ஸ்வீட் ஹோம்” என்று கூட ஒரு பெயர் வைத்திருந்தோம். இறுதியில் “பரிமளா அண்ட் கோ” என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள். அசிஸ்டண்ட்கள், தயாரிப்பாளர், நண்பர்கள் என எல்லோரிடமும் வாக்கெடுப்பு எடுத்தோம். பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்தார்கள்.

இந்த கதையை முதலில் தமிழ் குமரன் சாரிடம் சொன்னபோது, அவர் சிரித்த விதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவர் சாதாரணமாக மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் கதை கேட்டு மனதார சிரித்தார். அங்கேயே “இந்த படம் கண்டிப்பாக மக்களிடம் வேலை செய்யும்” என்ற நம்பிக்கை வந்தது.

ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்த கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் சார் உடனே “இது கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும்” என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது. மிஷ்கின் சாரிடம் கதை சொன்னபோதும், அவர் வழக்கம்போல் அமைதியாக இருந்தார். ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரித்தால் அது ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் என்று எனக்கு தெரியும். அங்கேயும் ஒரு நம்பிக்கை கிடைத்தது.

இறுதியாக, லைக்கா நிறுவனம் இந்த படத்துடன் இணைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சுபாஸ்கரன் சார் லண்டனில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார். இந்த படத்தையும் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ் குமரன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும்
வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகியுள்ளார்.

திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.