எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மீண்டும் மருத்துவமனையில் பொன்னம்பலம்..!
ஆனி 26, 2025 Published by Natarajan Karuppiah
நடிகர் பொன்னம்பலம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக பிரச்சனை காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் அவருக்கு நிதி உதவி செய்தனர். இதனை அடுத்து, அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், ஆசனவாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள ஆடியோவில், “பொருளாதாரத்தில் அடிமட்டத்துக்கு வந்துவிட்டேன். கமல்ஹாசன், சரத்குமார், தனுஷ், கே.எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆடியோ, ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அவருக்கான ஆதரவையும் திரட்டி வருகிறது.
















