பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது.. ’96’ 2ஆம் பாகம் குறித்து பிரேம்குமார்..!
வைகாசி 29, 2025 Published by Natarajan Karuppiah
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ‘96’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.
ஆனால் அதே நேரத்தில் ‘96’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை என்றும் அதனால் அவர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதாகவும் அவரும் மறுத்து விட்டதால் தற்போது வேறு நடிகரை அவர் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் பிரேம்குமார் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தின் நட்சத்திரங்களை வைத்து தான் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. ’96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் ’96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் ’96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்’ என இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.















