‘பராசக்தி’ விழாவில் சிவகார்த்திகேயன்: விஜய்யின் கடைசி படத்தை தியேட்டரில் கொண்டாடுங்கள்!
தை 5, 2026 Published by anbuselvid8bbe9c60f

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றாற்போல் இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.

படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம். இதில் ரவி மோகன் சார் பவர் புல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
ஜனவரி 9ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். 33 வருடங்கள் திரைத்துறையில் மகிழ்வித்தவர். கடைசி படம் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்தி’ படத்துக்கு வாருங்கள்” என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு, விஜய்யின் கடைசி படத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரு பெரிய படங்கள் மோதல் என்பதால் திரையரங்குகள் கொண்டாட்டக் களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது!





















