மீண்டும் இணைந்த ‘கரகாட்டக்காரன்’ ஜோடி: ராமராஜன் – கனகா சந்திப்பின் உருக்கமான பின்னணி!
தை 13, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஜோடிகள் வந்தாலும், 35 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஒரு ஜோடி என்றால் அது ‘கரகாட்டக்காரன்’ ராமராஜன் – கனகா தான். இளையராஜாவின் இசை, கவுண்டமணி – செந்தில் காமெடி, மற்றும் இந்த ஜோடியின் எதார்த்தமான நடிப்பு என இன்றும் அந்தப் படம் ஒரு ‘கல்ட் கிளாசிக்’.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த வெற்றி ஜோடி நேற்று நேரில் சந்தித்ததுதான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, ‘கரகாட்டக்காரன்’ மூலம் அறிமுகமாகி முன்னணி நாயகியாக வலம் வந்தவர். ஆனால், தனது தாயின் மறைவிற்குப் பிறகு அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வெளி உலகத்தொடர்பு ஏதுமின்றி தனிமையில் இருந்து வந்தார்.
சமீபத்தில் கனகாவின் தந்தையும் மறைந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ராமராஜன் திட்டமிட்டிருந்தார். இது குறித்து ராமராஜன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டவை:

“கனகாவுக்கு அவங்க அம்மானா உயிர். தேவிகா அம்மா இறந்தப்போ நான் ஷூட்டிங்ல இருந்ததால போக முடியல. சமீபத்துல அவங்க அப்பாவும் இறந்துட்டாங்க. அப்பவும் என்னால போக முடியலங்கிற வருத்தம் இருந்தது. அதனால கனகாகிட்ட பேசி, நான் உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். ஆனா அவங்க, ‘நாங்க வீடு மாத்திக்கிட்டு இருக்கோம் சார், நானே உங்க வீட்டுக்கு வர்றேன்’னு சொன்னாங்க.”
வாக்கு கொடுத்தபடியே நேற்று ராமராஜன் வீட்டிற்கு மதிய உணவிற்காக கனகா வருகை தந்துள்ளார். “உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?” என ராமராஜன் கேட்க, “எதுவானாலும் பரவாயில்லை” என வெகுளித்தனமாக கனகா பதிலளித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது திரையுலக நண்பரைச் சந்தித்த கனகா, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

















