மார்ச் 31-ல் எஸ்பிபி சிலை திறப்பு விழா: ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைத்த விஜய் யேசுதாஸ்!
பங்குனி 28, 2026 Published by Natarajan Karuppiah

மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள வி.டி. பட்டதிரிபாட் நினைவிடத்தில் (V.T. Bhattathiripad Cultural Complex) எஸ்பிபி-யின் 10 அடி உயர முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. மலையாளத் திரைப்படப் பாடகர்களின் சங்கமான ‘சமம்’ (SAMAM – Singers Association of Malayalam Movies) மற்றும் பாலக்காடு ஸ்வரலயா அமைப்பு இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. சிற்பி உன்னி கனாயி இந்தச் சிலையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார்.

இந்தச் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பாடகர் விஜய் யேசுதாஸ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, “சமம் சங்கீத மேகம்” என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவிலும் ரஜினிகாந்த் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனப் பாடகர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தனது நெருங்கிய நண்பரான எஸ்பிபி-யின் நினைவாக நடக்கும் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் எஸ்பிபி-க்கு சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளாவிலும் சிலை அமைக்கப்படுவது அவரது புகழுக்குக் கிடைத்துள்ள மற்றொரு மகுடமாகும். மொழி எல்லைகளைக் கடந்து இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக இது அமையப்போகிறது.
“எஸ்பிபி வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் ஒரு உணர்வு. அவரது சிலையைத் திறப்பது அவருக்கு நாங்கள் செய்யும் எளிய காணிக்கை.” – சமம் அமைப்பினர்.

















