Download App

‘தாய் கிழவி’ ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்: டிரெயிலர் வெளியீட்டு விழாவில் ராதிகா நெகிழ்ச்சி!

மாசி 24, 2026 Published by Natarajan Karuppiah

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப். 24) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மேடையில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், படத்தின் உருவாக்கம் மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

படத்தைப் பற்றிப் பேசிய ராதிகா, “இந்தப் படத்தை சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முழுவதும் சிரித்து ரசித்தேன். உண்மையில், இந்தப் படத்தைப் பார்த்தபோது இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், அவர் இந்த வேடத்தில் நடிக்க மாட்டார் என்பதால், அந்தத் துடிப்பான கதாபாத்திரத்தை ஒரு பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

இப்படத்தில் தனது தோற்றத்திற்காகப் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்த ராதிகா, கமல்ஹாசனைத் தனது முன்மாதிரியாகக் குறிப்பிட்டார்:

“இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தினமும் நான்கரை மணிநேரம் மேக்கப் போட வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு மிகவும் கோபம் வரும். ஆனால், அப்போதெல்லாம் எனக்கு கமல் சார்தான் நினைவுக்கு வருவார்.”

“அவ்வை சண்முகி படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். மூன்று மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து மேக்கப் கொட்டும், அதைத் தாங்கிக்கொண்டு நடிப்பேன் என்பார். அவர் அத்தனை கதாபாத்திரங்களுக்குச் சலிக்காமல் மேக்கப் போட்டிருப்பதை நினைக்கும்போது, என் சிரமம் பெரிதாகத் தெரியவில்லை.”

தொடர்ந்து பேசிய அவர், “கமல் சார் எப்போதும் என்னிடம் ஒன்று சொல்வார், ‘ராதிகா, திரையில் நீ தெரியக்கூடாது, நீ ஏற்கும் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும்’ என்பார். அந்த வார்த்தை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த இன்ஸ்பிரேஷனில்தான் இந்த ‘தாய் கிழவி’ கதாபாத்திரத்தை ஏற்றேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமாக ‘தாய் கிழவி’ உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

More News

Trending Now