ரஜினியுடன் காதல் படம் இயக்க ஆசை: இயக்குநர் சுதா கொங்காரா!
மார்கழி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்காரா , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐ வைத்து ஒரு முழுமையான காதல் படம் இயக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10, 2026 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
‘பராசக்தி’ படத்தை ப்ரோமோட் செய்ய அளித்த பேட்டியில் சுதா கொங்காரா கூறியதாவது: “ஒரு முழுமையான காதல் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. அதிலும் ரஜினி சாரை வைத்து ‘முதல் மரியாதை’ மாதிரி ஒரு காதல் படம் இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவருடைய தீவிர ரசிகை. அதற்கான கதையைக் கூட எழுதி வைத்துள்ளேன். அதை இப்போது எடுத்து மீண்டும் முழுமையாக உருவாக்க வேண்டும். இது தவிர, காதலை மையமாக கொண்ட ஒரு தெலுங்கு நாவலை படித்தேன். அதையும் படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார்.
சுதா கொங்காராவின் இந்த வெளிப்பாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி – சுதா கொங்காரா கூட்டணி உருவானால் தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்!




















