Download App

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘தடயம்’ – அதிரடி சீரிஸை அறிவித்தது ZEE5 தமிழ் !

மாசி 19, 2026 Published by Natarajan Karuppiah

இந்தியாவின் முன்னணி உள்ளூர் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘தடயம்’ (Clue)- குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சீரிஸ், ஒரு அதிர்வூட்டும் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தடயம்’ சீரிஸ், அந்த காலகட்டத்தில் எல்லையோர கிராமங்களில் நடு இரவில் நிகழ்ந்த தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்த கொடூர சம்பவங்கள், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பதிலற்ற கேள்விகளையும், பல மாதங்கள் நீடித்த மர்மத்தையும் உருவாக்கின. பணம், நகை, கொள்ளை போகவில்லை ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் திருமணத்தின் மிகப் புனிதமான அடையாளங்களான கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டும் திருடப்பட்டிருந்தன. கொள்ளை எதுவும் நடைபெறாமல் இப்படி நடைபெற்றது, இந்த கொலைகளை இன்னும் அச்சமூட்டுவதாக மாற்றியது. இந்த சீரிஸ் பிப்ரவரி 27 முதல் ZEE5 தமிழில் திரையிடப்பட உள்ளது.

நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ (SI)ஆதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வேடத்தில் தோன்றுகிறார். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், கூர்மையான புத்திசாலித்தனமும் உறுதியும் கொண்ட ஒரு காவல் அதிகாரியின் விசாரணையைப் பின்தொடர்கிறது. கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் ஒரு முடிச்சை அவர் கண்டறிகிறார். இந்த கொலைகள் பேராசையால் தூண்டப்பட்டதல்ல. மாறாக, ஆவேசம், சடங்கு நம்பிக்கைகள் அல்லது அதைவிட பயங்கரமான ஏதோ ஒன்றால் நடத்தப்பட்டதாக இருக்கிறது. கிராமங்களைப் பயம் ஆட்கொள்ள, அமானுஷ்யக் கதைகள் பரவ, விசாரணை ஒரு பதற்றமான, பெரும் ஆபத்தான மனித வேட்டையாக மாறி, யாரும் எதிர்பாராத அளவுக்கு இருண்ட உண்மையைக் வெளியே கொண்டு வருகிறது.

தொடரின் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் கூறியதாவது:

“‘தடயம்’ என்பது ஒரு க்ரைம் த்ரில்லர் மட்டுமல்ல, நமக்கு நெருக்கமான கிராமிய சமூகத்தில் நிலவும் பயம், நம்பிக்கை, ஆவேசம் ஆகியவற்றை ஆராயும் ஒரு முயற்சியாகும். இந்த உண்மை சம்பவத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அந்தக் குற்றங்கள் எவ்வளவு ஆழமான, உணர்ச்சிப்பூர்வமான, புனிதமான விஷயங்களை இலக்காகக் கொண்டன என்பதுதான். இந்தக் கதையை நேர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் பார்வையாளரின் மனதில் அழுத்தமாக பதியும் வகையில், அச்சமூட்டும் நிஜத்துடன் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.” அது நிறைவேறியதில் மகிழ்ச்சி.

எஸ்ஐ (SI) ஆதியமான் வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி கூறியதாவது:

“‘தடயம்’ சீரிஸில் என்னை ஈர்த்தது அதன் உண்மைத்தன்மைதான். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை அல்ல. பொறுமை, நம்பிக்கை மற்றும் மனித மனதைப் புரிந்து கொள்வது பற்றிய கதை. பயமும் பதிலற்ற கேள்விகளும் நிறைந்த ஒரு சூழலுக்குள் நுழைகிறான் அதிகாரி ஆதியமான். அந்த சிக்கலான மனநிலைதான் இந்த கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாற்றியது.”

நடிகை சிவாதா கூறியதாவது:

“இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வலிமையானவர், உள்ளுணர்வு கொண்டவர், தொடர்ந்து எதிர்கொள்ளும் பயங்கரமான சூழல்களிலும் தளராதவர். ‘தடயம்’ சீரிஸ் அதன் கதாபாத்திரங்களுக்கு கேள்வி எழுப்பவும், அவர்கள் எதிர்கொள்கின்ற அழுத்தத்தின் பாரத்தை உணரவும் தனித்தன்மையான இடமளிக்கிறது. நிஜத்தன்மையையும், அச்சமூட்டும் சூழலையும் இவ்வளவு சமநிலையாகக் கையாளும் க்ரைம் சீரிஸ் அரிதானது.”

பிப்ரவரி 27 முதல், தமிழ் ZEE5-இல் மட்டும், இந்த அதிர்வூட்டும் உண்மை கதையின் பயங்கர அனுபவத்தை நேரடியாக காணுங்கள்.

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது

More News

Trending Now