நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
December 8, 2025 Published by Natarajan Karuppiah

சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமார், நடிப்புக்கு அப்பால் கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்தத் தொடரில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடந்த 12 மணி நேர கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். இவர் ரேஸில் கலந்துகொள்வதைக் கேள்விப்பட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டிருந்தனர்.

விளையாட்டு மீதான தனது அர்ப்பணிப்புக்கு இடையே, தனது ரசிகர்களின் பாசத்தைப் புரிந்துகொண்ட அஜித், அவர்கள் அனைவருடனும் பொறுமையாக தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார். “மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

விளையாட்டுப் போட்டியின் சூழலைப் புரிந்துகொண்டு, மற்றவர்கள் பாதிக்காத வண்ணம் ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற தனது எண்ணத்தை அஜித் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இந்த பொறுப்புணர்வு மிகுந்த வேண்டுகோள் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
























