“சண்டை மட்டுமே போடுற ஜோடி!” – ‘கட்டா குஸ்தி 2’ செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வைகாசி 16, 2026 Published by Natarajan Karuppiah

“சண்டை போடாத ஜோடியே இல்லைன்னு சொல்லுவாங்க… ஆனா இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி!” என்ற சுவாரசியமான டேக்லைனுடன், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் செகண்ட் லுக் (Second Look) போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி, கணவன்-மனைவிக்குள் இருக்கும் ஈகோ மற்றும் மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. அந்த சூப்பர் ஹிட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த செகண்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்து, படம் 2026, ஜூலை 3-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தியேட்டர்களில் செம்ம என்டர்டெய்ன்மென்ட்டுக்கு ரெடியாகுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி அசத்திய இயக்குநர் செல்லா அய்யாவு தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

‘வீரா – கீர்த்தி’ தம்பதியாக மீண்டும் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் முதல் பாகத்தில் நம்மை சிரிக்க வைத்த கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷ்ணு விஷாலின் ‘விவி ஸ்டுடியோஸ்’ (VV Studioz) மற்றும் ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ (Vels Film International) நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.
இந்த இரண்டாம் பாகத்திற்கு ஒரு புதிய பலமாக, முன்னணி இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் (Sean Roldan) இசையமைத்துள்ளார்.

‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் கிளைமாக்ஸில், மல்யுத்தப் போட்டியில் வென்ற கீர்த்திக்கும் வீராவிற்கும் பெண் குழந்தை பிறப்பதுடன் படம் சுபமாக நிறைவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தின் கதை, அதற்குப் பிறகு அவர்களது குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான மோதல்களை மையமாகக் கொண்டு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 3 முதல் தியேட்டர்களில் குஸ்தி சண்டையோடு சேர்த்து காமெடி சரவெடியைக் காண ரசிகர்கள் இப்போதிருந்தே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
















