ஜெயிலர் 2: பான்-இந்தியா மெகா கூட்டணி
மாசி 2, 2026 Published by Natarajan Karuppiah

கடந்த 2023-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம், தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கவிருப்பதுதான் தற்போது சினிமா வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்.
கசிந்துள்ள தகவல்களின்படி, ஷாருக்கான் வெறும் கௌரவத் தோற்றத்தில் மட்டும் இல்லாமல், கதைக்குத் திருப்புமுனை தரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் ரஜினிகாந்தின் (முத்துவேல் பாண்டியன்) நெருங்கிய நண்பராகவும், ஆபத்து காலத்தில் அவருக்கு உதவும் ‘சப்போர்ட்’ சிஸ்டமாகவும் ஷாருக்கான் தோன்றுவார் எனத் தெரிகிறது.
ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தனியாகப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் மும்பை அல்லது சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போது படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. முத்துவேல் பாண்டியனின் குடும்பம் மற்றும் புதிய எதிரிகளை எதிர்கொள்ளும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நெல்சன் தனது ஸ்டைலில் மீண்டும் ஒரு மெகா நட்சத்திரக் கூட்டணியை உருவாக்கியுள்ளார்: ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே. சூர்யா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2026 ஜூன் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்துவேல் பாண்டியன் மீண்டும் தனது துப்பாக்கியைத் தூக்கப்போகும் அந்தத் தருணத்திற்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
























