‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு வாபஸ்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
மாசி 10, 2026 Published by Natarajan Karuppiah

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டம் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற படக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் (CBFC) ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தள்ளிப்போனது.

தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்குழுவிற்கு அனுப்ப முடிவெடுத்ததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.தனி நீதிபதி இத்திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று, இறுதியில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கே வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில் காலதாமதம் ஏற்படும் எனக் கருதிய படக்குழு, வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடிதம் அளித்தது.
தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழுவிடம் (Revising Committee) படத்தை சமர்ப்பிக்க படக்குழு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது.தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, தணிக்கை வாரியம் குறிப்பிடும் மாற்றங்களைச் செய்து படத்தை விரைவாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது

படக்குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. இதன் மூலம், அடுத்த 20 நாட்களுக்குள் மறு ஆய்வுக்குழு படத்தை முழுமையாகப் பார்த்து, தேவையான திருத்தங்களை வழங்க வாய்ப்புள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















