லண்டனில் ஷாருக்கான் – கஜோலுக்கு நிரந்தர இடம் !
December 5, 2025 Published by anbuselvid8bbe9c60f

பாலிவுட்டின் அழியாத காதல் ஜோடி ஷாருக்கான் மற்றும் கஜோல் இடம்பெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (DDLJ) வெளியாகி இம்மாதம் முழுமையாக 30 ஆண்டுகள் நிறைவடைந்தன. 1995-ல் வெறும் ₹4 கோடி பொருட்செலவில் தயாரான இப்படம் உலகளவில் ₹102 கோடிக்கு மேல் வசூல் செய்து பாலிவுட் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில், லண்டனின் பிரபலமான லெஸ்டர் ஸ்கொயர் (Leicester Square) பகுதியில் ஷாருக்கான் மற்றும் கஜோலின் வெண்கல சிலை (bronze statue) நிறுவப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் உலோக சிலை என்பதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

படத்தின் ஐகானிக் போஸில் – ஷாருக்கான் கைகளை விரித்து நிற்க, கஜோல் அருகில் புன்னகைத்தபடி – வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் கிங் ஆஃப் பாலிவுட் ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், “இந்தப் படமும் ராஜ்-சிம்ரனும் எங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் சொந்தமானது. 30 வருடங்களுக்குப் பிறகும் இங்கே லண்டனில் எங்கள் சிலை நிற்கிறது என்றால் அது ரசிகர்களின் அன்புக்குச் சான்று” என்று உருக்கமாக தெரிவித்தார்.
கஜோலும், “DDLJ எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த சிலை எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்” என்று கண் கலங்க கூறினார்.

திறப்பு விழா புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. #SRKajolStatue, #DDLJ30Years போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன.
லண்டனில் சார்லி சாப்ளின், பேட்மேன், ஹாரி பாட்டர் உள்ளிட்ட உலகப் பிரபல கதாபாத்திரங்களுக்கு சிலைகள் உள்ள நிலையில், இந்திய சினிமாவின் முதல் பிரதிநிதிகளாக ஷாருக்கான்-கஜோல் இடம் பிடித்துள்ளது பாலிவுட் ரசிகர்களுக்கு பெருமை அளிக்கும் தருணம்!






















