‘பருத்திவீரன்’ பட பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி!
மார்கழி 31, 2025 Published by anbuselvid8bbe9c60f

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இப்படத்தில் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் ஆல்பம் சூப்பர் ஹிட்டானது.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்பாடலை கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் பாடியிருந்தார். அத்துடன், அவர் பாடலில் நடித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் மூலம் லட்சுமி அம்மாள் பெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
லட்சுமி அம்மாளின் மறைவு திரை ரசிகர்களையும், இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்கள் பாடி பிரபலமான அவர், ‘பருத்திவீரன்’ படம் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.
லட்சுமி அம்மாளின் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
























