சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சி: ‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி தற்கொலை!
மார்கழி 30, 2025 Published by Natarajan Karuppiah

சின்னத்திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அறியப்பட்ட நந்தினி (26), பெங்களூருவில் தான் தங்கியிருந்த விடுதி (PG) அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கன்னடத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கௌரி’ தொடரில் நந்தினி கதாநாயகியாக நடித்து வந்தார். இதில் துர்கா, கனகா என இரு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரட்டை வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார். இவரது யதார்த்தமான நடிப்புக்குக் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது.

பெங்களூரு கெங்கேரி (Kengeri) பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நந்தினி தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நந்தினி தனது காதலரைச் சந்தித்துவிட்டு இரவு அறைக்குத் திரும்பியுள்ளார். அதன் பிறகு அவர் செல்போன் அழைப்புகளை ஏற்காததால், சந்தேகமடைந்த அவரது நண்பர்களும் விடுதி மேலாளரும் கதவை உடைத்துப் பார்த்தபோது, நந்தினி சடலமாக மீட்கப்பட்டார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நந்தினி எழுதி வைத்த தற்கொலை கடிதம் (Suicide Note) கைப்பற்றப்பட்டது. அதில் சில உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன:
நந்தினிக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அவர் அதற்குத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

நந்தினியின் தந்தை அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். வாரிசு அடிப்படையில் நந்தினிக்குக் கிடைத்த அரசு வேலையை ஏற்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் அதை மறுத்து வந்துள்ளார்.
குடும்பப் பிரச்சனைகள் மற்றும் வேலை தொடர்பான அழுத்தங்களால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வருத்தமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், ‘கௌரி’ சீரியலில் அவரது கதாபாத்திரம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. திரையில் நடித்த காட்சி, நிஜ வாழ்க்கையிலும் இப்படி ஒரு விபரீத முடிவாக மாறும் என்று சக நடிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
“அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார். கடினமாக உழைக்கக்கூடியவர். அவருக்குள் இவ்வளவு பெரிய ரணம் இருந்தது எங்களுக்குத் தெரியவில்லை,” என அவருடன் நடித்த சக கலைஞர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
























