தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய படம்: பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!
மார்கழி 30, 2025 Published by anbuselvid8bbe9c60f

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ (2019) விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். அதன்பிறகு தியாகராஜன் குமாரராஜா எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படம் உறுதியாகியுள்ளது.
இந்தப் புதிய படத்தில் மீண்டும் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ஃபகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தும் அடுத்த 10 நாட்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

படக்குழு 2026 பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளது. திரைக்கதையை ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடியும் வகையில் அமைத்துள்ளதால், தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் மிகக் குறுகிய காலத்தில் உருவாகும் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















