Download App

“பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சியே தனி”: நடிகர் ரஜினி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

தை 22, 2026 Published by Natarajan Karuppiah

கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU), 1975-1979 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்காகப் பல ஆளுமைகள் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.

இந்தச் சந்திப்பில் அதே பிரிவில் பயின்ற முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) சைலேந்திர பாபு IPS, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு IAS உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உயர் பதவிகளில் இருந்தாலும், தங்கள் கல்லூரித் தோழர்களுடன் மீண்டும் இணைந்த தருணத்தில் அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காணொளிக் காட்சி வாயிலாக மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் மீண்டும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு, இறையன்பு போன்ற பலர் இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், பெரும் பதவிகளிலும் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது.”

“டேய் சிவாஜி” – பழைய நினைவுகளைப் பகிர்ந்த ரஜினி நட்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், தனது சொந்த வாழ்க்கையில் இன்றும் கடைபிடிக்கும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் “நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூரு செல்வேன். அங்கு நான் முன்பு பணியாற்றிய டிரைவர், கண்டக்டர் நண்பர்களைச் சந்திப்பேன்.”

“சிவாஜி என்ற என் பெயரையே நான் மறந்துவிட்டேன். ஆனால், அவர்கள் என்னை ‘டேய் சிவாஜி’ என்று உரிமையோடு அழைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.””இந்தச் சந்திப்போடு நிறுத்திவிடாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களைச் சந்தியுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்குப் பெரும் புத்துணர்ச்சியைத் தரும்.”

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு கூடியிருந்த முன்னாள் மாணவர்களுக்குத் தங்களின் இளமைக்கால நினைவுகளை மீட்டுத்தருவதாகவும், வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க ஒரு நிகழ்வாகவும் அமைந்தது.