Download App

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ‘தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா

December 11, 2025 Published by Natarajan Karuppiah

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது.

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு ‘தி கேரம் குயின்’ என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார்

விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட் பேசியது: அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.

தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில் பேசியது: நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஜிமா கதை என்னிடம் சொன்னார்கள் அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்து, நானே அந்த கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன் என்றார்.

இயக்குனர் முரளி பேசும் போது: நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மை சம்பவத்தை படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையை திரைக்கதையை உருவக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான் படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்.

உண்மையான கேரம் குயின் ஆன காஜிமா பேசும் போது: நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை கொண்டு என்னை விளையாட அழைத்து செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லாராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும்.

நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா பேசியது: கேரம் குயின் கதையை கேட்டபோது அப்படியோ என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More News

Trending Now