Download App

வெற்றிமாறனுடன் ‘அரசன்’ – விஜய் சேதுபதியின் உருக்கமான பாராட்டு!

December 17, 2025 Published by anbuselvid8bbe9c60f

vjs

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி, படத்தில் இணைந்ததன் பின்னணி மற்றும் இயக்குநர் வெற்றிமாறனுடனான பணி அனுபவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “வெற்றிமாறன் சார் கதை எழுதும்போதே என்னை நினைவில் வைத்து இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அவரது ஞாபகத்தில் நான் வருவதே பெரிய சந்தோஷம். ‘சார், எழுதுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அவர் ஒரு திறமையான இயக்குநர். அவரது அறிவும் அக்கறையும் ஆழமானவை. ஒருவருடன் பேசும்போதே நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றால், அவருடன் வேலை செய்யும்போது இன்னும் அதிகம் கற்றுக்கொள்ளலாம். வெற்றிமாறன் சாருடன் பணியாற்றுவது சுகமான சந்தோஷம். எத்தனை நாட்கள் ஷூட்டிங் என்பதெல்லாம் பார்க்காமல், அவர் கேட்டவுடன் ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்” என்று கூறினார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் ‘அரசன்’, வடசென்னை யூனிவர்ஸைச் சேர்ந்த படமாகும். சிம்பு ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூல் டிசம்பர் 24-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் அரங்குகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க முனைப்புக் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒளிப்பதிவாளராக ஆர். வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகின்றனர். அடுத்த ஆண்டு இறுதியில் (2026) இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியுடன் சிம்பு மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘விடுதலை’ தொடருக்குப் பிறகு வெற்றிமாறனுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைவதும் குறிப்பிடத்தக்கது. ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது!

Trending Now