விஜயின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு: ரவி மோகன் உள்ளிட்டோர் ஆதரவு!
தை 8, 2026 Published by anbuselvid8bbe9c60f

நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்திற்கு சென்சார் போர்டு (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டதால், தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஜனவரி 7) நடைபெற்ற விசாரணையில், நீதிபதி பி.டி. ஆஷா ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால், ரிலீஸை உறுதிப்படுத்த முடியாத நிலையில், படக்குழு ரிலீஸை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “இதயம் கனத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். ஜனவரி 9-ம் தேதி எதிர்பார்க்கப்பட்ட ‘ஜன நாயகன்’ வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்சார் தாமதம் அரசியல் ரீதியான பழிவாங்கல் என்று சிலர் விமர்சித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில், நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்: “இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ… அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முன் அவரது இறுதி படமாக கருதப்படுகிறது. ரசிகர்கள் ஏமாற்றமடைந்த போதிலும், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.
புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















