Download App

தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் இந்தி சர்ச்சை! தமிழ் வளர்ச்சிக்குத் திமுக அரசின் பங்களிப்பு என்ன?

சித்திரை 7, 2026 Published by premkumar6c8c7c1bc8

தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆதரவாகவும் திமுக அரசை எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு மிகக் கடுமையான எதிர்வினையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றியிருக்கிறார். இருமொழிக் கொள்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக அரசு என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் அதன் தொன்மையினை அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தமிழர் நாகரிகத்தின் பழமையை உலகிற்குப் பறைசாற்றத் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18.42 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, வைகை நாகரிகத்தின் எச்சங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைப் போற்றும் வகையில் திருநெல்வேலியில் 58.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5,000 முதல் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததற்கான அறிவியல் சான்றுகள் கண்டறியப்பட்டன. இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் மேம்பட்ட தொழில்நுட்பமானது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழ் நிலப்பரப்பில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது அகழாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்தது. இதை வெளிக்கொண்டுவர தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டது என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.

மேலும் தமிழர் பண்பாட்டு வேர்களைத் தேடி கேரள மாநிலத்தில் முசிறி, ஒடிசா மாநிலத்தில் பாலூர், ஆந்திர மாநிலத்தில் வேங்கி மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாஸ்கி ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொல்பொருட்களின் காலத்தைக் கணிக்க DNA பகுப்பாய்வு, கார்பன் டேட்டிங் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கின்றனர்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நிதி உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் புதுமைப் பெண் திட்டத்தின் வழியாக  வழங்கப்படுகிறது. அதே போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 1,500 பேரைத் தமிழ் மொழித் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1,500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்கின்றனர் திமுக நிர்வாகிகள். மேலும் அவர்கள் கூறியதாவது, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் கட்டாயம் இல்லை என்று கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை மாற்றி தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கானத் தேர்வுகளில் தமிழைக் கட்டாயமாக்கியது திமுக அரசு.

அரசு நிர்வாகத்திலும் ஆன்மீகத்திலும் தமிழின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு திட்டம் தொடங்கப்பட்டு  294 கோயில்களில் தமிழ் அர்ச்சனை நடைமுறைப் படுத்தப்படுவது, வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி முன்னுரிமையுடன் இடம் பெற வேண்டும் என்ற ஆணை கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தப்படுவது, சட்டக் கல்லூரிகளில் சட்டத் தமிழ் என்ற புதிய பாடத் திட்டம் 2024-25 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது போன்றவை தமிழ் மொழிப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறை சார்பாக வள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் 3D லேசர் ஒளி-ஒலி காட்சி 11.98 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவரது படைப்புகள் மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறாக, தமிழ்மொழியை ஒரு செம்மொழியாக நிலைநிறுத்தவும், அதன் இலக்கியச் செழுமையையும் வரலாற்றுப் பெருமையையும் எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் திமுக தலைமையிலான அரசு பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர் தமிழ்ப் பற்றாளர்கள்.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுக தமிழ் மொழிக்கென சில அறிவிப்புகளைத் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தமிழின் சிறப்பைப் பறைசாற்ற சென்னையில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான செம்மொழி மாநாடு நடத்தப்படும். மொழியியல் மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த ஐந்து முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவதோடு, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்ச் சொற்களை உருவாக்க நிரந்தரக் கலைச்சொல்லாக்கக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

மேலும் நவீன காலத்தின் தேவையறிந்து, ஏஐ துறையில் தமிழை மேம்படுத்தத் தனித்துவமான பெரிய மொழி மாதிரிகள் (LLM) உருவாக்கப்படும் என்றும், இதற்காக வட்டார வழக்குகள் மற்றும் உரைகள் சேகரிக்கப்பட்டுத் தமிழ்த் தரவுக் களஞ்சியம் பலப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் தமிழ் சார்ந்த ஏஐ மென்பொருள் உருவாக்கத்தை ஊக்குவிக்க தமிழ் ஏஐ ஃபெல்லோஷிப், பள்ளிகளில் நவீன மொழி ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்புகள் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழ் மொழிக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் மொழிகளுக்கும் ஒலி ஒற்றுமை இருக்கிறது. ஆனால் பொதுவான மொழிக் குடும்பம் இல்லை. ஆஸ்திரேலிய பழங்குடி உறவு முறை தமிழ் உறவு முறை போலவே இருக்கிறது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சிறிய அளவு மரபணு பரிமாற்றம் நடந்திருக்கலாம் போன்ற பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே நடந்திருக்கின்றன். இந்த ஆய்வுகளை மேம்படுத்தவும், கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மொழியியல், பண்பாட்டு ஒற்றுமைகளைக் கண்டறிய மொழியியலாளர்கள், தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள், கலை வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். இளைய தலைமுறையினருக்கு மொழிப்போர் வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் வகையில், பொள்ளாச்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னம், நவீன நூலகம் அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் தமிழ் ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது

More News