Download App
ரஜினி கேங்க்

Rajini Gang

Cast: Rajini Kiishen, Dwiwika, Munishkanth, Motta Rajendran

Director: M. Ramesh Baarathi

Music Director: M.S. Jones Rupert

Producer: C.S. Padamchand, C. Ariyant Raaj, Rajini Kiishen

Banner: Mishri Enterprises

Release Date: November 28, 2025

ரஜினி கேங்க் திரை விமர்சனம்

Published November 28, 2025 by Natarajan Karuppiah

ரஜினி கேங் .. ஆர்வம் மிக்க புது முயற்சி

மிஸ்ரி எண்டர்பிரைசஸ் (Mishri Enterprises) சார்பில் பதம் சந்த் மற்றும் அரியன் ராஜ் தயாரிப்பில், எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ரஜினி கேங்க்’. ரஜினி கிஷன் கதாநாயகனாகவும், த்விவிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ரஜினி சவுண்ட் சர்வீஸ் வைத்திருக்கும் நாயகன், ஊர் பிரசிடென்ட் மகளைக் காதலித்து, ஊரை விட்டு ஓடிப்போகும்போது முனீஷ்காந்தின் காரில் லிப்ட் கேட்கிறார்கள். வழியில் திருடனான கல்கியும் இவர்களுடன் இணைகிறார். மந்திரிக்குச் சொந்தமான அந்த ராசியான காரும், இரவில் விசித்திர சக்திகள் கொண்டவராகச் சொல்லப்படும் அதன் ஓட்டுநரும் (முனீஷ்காந்த்) பயணத்தை மர்மமாக்குகிறார்கள்.

காதல் ஜோடியைத் துரத்தும் தாய்மாமன் கூல் சுரேஷ் ஒருபுறம் இருக்க, அவசரத் திருமணத்திற்காக சக பயணியான திருடன் கொடுத்த தாலியை நாயகன் கட்டுகிறான். ஆனால், அந்தத் தாலி இறந்த ஒரு பெண்ணுடையது என்பதால், நாயகி மீது பேய் புகுந்து கொள்கிறது. இதற்கிடையில் பேயை விரட்ட சாமியாராக மொட்டை ராஜேந்திரன் நுழைய, அதுவரை காதல் மற்றும் பயணப் படமாக இருந்த கதை, திடீரென திகில் மற்றும் காமெடி ஜானருக்கு மாறுகிறது. இந்த ஜானர் மாற்றம் மற்றும் அதனூடாக இயக்குநர் சொல்ல வந்த கதை சரியாகச் சென்றடைந்ததா என்பதே மீதிக்கதை.

அறிமுக நாயகன் ரஜினி கிஷன், முதல் படம் என்ற பயம் இல்லாமல் ஆட்டம், காதல், காமெடி என அனைத்திலும் அசால்டாக ஸ்கோர் செய்கிறார். நாயகி த்விவிகாவும் கிளாமர் மற்றும் நடிப்பில் கவர்கிறார். ஆனால், படத்தில் உள்ள மற்ற காமெடி நடிகர்கள் ஏமாற்றமே அளிக்கிறார்கள். முனீஷ்காந்த் ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்களைக் கொடுத்து சலிப்படையச் செய்கிறார். கூல் சுரேஷின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. மொட்டை ராஜேந்திரன் மற்றும் கல்கி வரும் காட்சிகளிலும் எதிர்பார்த்த அளவு நகைச்சுவை இல்லை.

தொழில்நுட்ப ரீதியாக, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையும் பின்னணி இசையும் கமர்ஷியலாக அமைந்துள்ளன. என்.எஸ்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாகக் காட்டியுள்ளது. படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா காட்சிகளின் நீளத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இருப்பினும், மேடையில் ரகசியமாகப் பேசுவது மைக் வழியாக ஊருக்கே கேட்பது போன்ற சில காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

எழுத்து மற்றும் இயக்கத்தில் எம்.எஸ்.ரமேஷ் பாரதி லாஜிக்கை விட, நகைச்சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர் தனது எழுத்தை விட, காமெடி நடிகர்களை மட்டுமே அதிகம் நம்பியிருப்பது பலவீனமாக அமைந்துள்ளது. நகைச்சுவை எழுத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் , காமெடி கலந்த திகில் பட ரசிகர்களுக்கு , இந்த படம் ஓரளவிற்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது

Rating: (2.75/5)

[lai_inner_right_top]

More News

No categories found.

Trending Now