சிறை திரை விமர்சனம்
Published மார்கழி 26, 2025 by Natarajan Karuppiah

சிறை : விக்ரம் பிரபுவின் கிரீடத்தில் வைக்கப்பட்ட வைரம்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய் குமார், ஆனந்தா தம்பிராஜா , அனிஷ்மா அனில் குமார், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “சிறை”. படத்தின் கதையை எழுதி இருக்கிறார் ” டாணாகாரன் ” பட இயக்குனர் தமிழ் .
ஹெட் கான்ஸ்டபிள் கதிரவன் ( விக்ரம் பிரபு) உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருப்பினும் தன்னுடைய வேலைக்கு நியாயமாக நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி. அதற்கு பலனாக பல விசாரணைகளையும், உயர் அதிகாரிகளின் பேச்சுக்களையும் எதிர்கொள்கிறார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டிய கைதி அப்துல் ராஃப் ( எல் கே அக்ஷய் குமார்) உடன் பாதுகாப்புக்காக செல்ல வேண்டிய பணி நியமிக்கப்படுகிறது. கதிரவனும் அவருடன் இரண்டு ஜுனியர் கான்ஸ்டபிள்களும் இணைந்து பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் கைதி அப்துலுக்கும் கதிரவன் குழுவுக்கும் என்னென்ன குழப்பங்கள் உருவாகின்றன. அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

எந்த பந்தாவும் இல்லாமல், சினிமா போலீஸ் டெம்ப்லேட்டுகள் எதுவும் உறுத்தாமல் எதார்த்தமான காவல்துறை அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார் விக்ரம் பிரபு. என்னுடைய 25 ஆவது படம் இது என பெருமையுடன் அவர் சொல்லிக் கொள்ளலாம். பக்குவமாகவும், புத்திசாலித்தனமாகவும் கதையை தேர்வு செய்திருக்கிறார். படத்தில் மேலும் கவனம் பெறுகிறார் அக்ஷய் குமார். தயாரிப்பாளரின் மகன் என்பதால் நடித்தால் ஹீரோ தான், குறைந்தபட்சம் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் வேண்டும் இப்படி எந்த அழுத்தமும் படக்குழுவுக்கு கொடுக்காமல் திறமை இருந்தால் எந்த கதாபாத்திரத்திலும் ஜொலிக்கலாம் என்பதை முதல் படத்திலேயே நிருபித்திருக்கிறார் அக்ஷய் குமார். இயல்பாகவே அவருக்கு நல்ல நடிப்பு வருகிறது. இந்தக் கதையில் ஹைலைட் அவர்தான். தொடர்ந்து கவனம் பெறுகிறார் அனிஷ்மா அனில்குமார். கண்கள் கலங்க பரிதவித்து காத்து நிற்பது, காதல் ஏக்கத்துடன் பார்ப்பது, என தமிழுக்கு நல்வரவு நடிகை. படம் முழுக்க ஒன்று இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆனால் எந்த கதாபாத்திரமும் தேவையில்லை என இல்லாமல் அத்தனை பேரும் மனதில் நிற்கின்றனர்.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கான்ஸ்டபிள் மற்றும் ஏட்டு, தலைமை கான்ஸ்டபிள் வரை உள்ளவர்கள் ஏன் இவ்வளவு மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள் மற்றும் கோபப்படுகிறார்கள் என பல கேள்விகள் நமக்கு இருக்கும். அத்தனைக்கும் படத்தின் ஆரம்பத்திலிருந்து பதிலை எடுத்து வைக்கத் துவங்குகிறது திரைக்கதை. அதற்கே இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் கதை ஆசிரியர் தமிழ் இருவருக்கும் பாராட்டுக்கள். ஒரு காவல்துறை அதிகாரிக்கு எப்படிப்பட்ட பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது அதை எங்கே எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பொதுமக்களுக்கு ஒரு நல்ல கண் திறப்பு படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் கிராமத்து அத்தியாயங்களும், காவல்துறை அத்தியாயங்களும் இரண்டும் வெவ்வேறு உலகமாக நம்மை கடத்துகின்றன. பிலோமின் ராஜா படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக்கி, கதையை அதன் பாதையில் மட்டும் நகர்த்தி இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நீலோத்தி மற்றும் மன்னிச்சிரு பாடல்கள் மெல்ல இதயங்களைத் தொடும். பின்னணி இசை திரைக்கதையை இடையூறு செய்யாமல் நம்மையும் பல காட்சிகளில் காவல் துறை மற்றும் நீதிமன்ற உலகங்களுக்கு கொண்டு செல்கிறது.
கிராமத்து அத்தியாயங்களை மட்டும் கொஞ்சம் சுருக்கி காவல்துறை மற்றும் பாதுகாப்பு பயணக் காட்சிகளை இன்னும் அதிகமாக்கி இருக்கலாம். அது ஒன்று மட்டுமே சின்ன குறை.

மொத்தத்தில் காவல்துறை அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய படமாகவும் இந்த வருட இறுதிக்கு ஆறுதல் தரும் தமிழ் படமாகவும் மாறி இருக்கிறது ” சிறை “.
Rating: 



(3.5/5)












