பராசக்தி திரை விமர்சனம்
Published தை 10, 2026 by Natarajan Karuppiah

பராசக்தி : தமிழ் சமூகத்திற்கு முக்கிய ஆவணம்!
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் வழங்கும் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 25ஆவது படம். உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, குரு சோமசுந்தரம் , சேத்தன், குளப்புள்ளி லீலா , பிரித்வி ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
1962 கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது மத்திய அரசு. இதை எதிர்த்து புறநானூறு என்கிற தமிழ் மாணவர்கள் படை போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் செய்கின்றனர். அதற்கு தலைமை ஏற்கிறார் செழியன் ( சிவகார்த்திகேயன்) . இந்த போராட்டத்தை வேரோடு களையெடுக்க வருகிறார் திருநாடன் ( ரவி மோகன்) . விளைவு தன் நண்பனை இழக்கிறார் செழியன். அதன் பிறகு எந்த போராட்டமும் வேண்டாம் என குடும்பத்துக்காக வேலைக்கு செல்கிறார் . ஆனால் அண்ணனின் வழியில் கல்லூரியில் படிக்கும் தம்பி சின்னதுரை ( அதர்வா) அடுத்து போராட்டத்தில் களமிறங்குகிறார். இந்தப் போராட்டத்தின் முடிவு என்ன ஆனது மாணவர்கள் புரட்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பது மீதி கதை.

இத்தனை வருட தமிழ் சினிமாவின் வரலாற்றில் எந்த இயக்குனரும் தொடாத ஒரு சம்பவம் 1960களில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியதற்கே இயக்குனர் சுதா கொங்கராவிற்கு பாராட்டுகள். அதை திரைக்கதையாக அமைத்து அருமையாகவே வழங்கி இருக்கிறார்.
” என்னுடைய 25 ஆவது படம்” என பெருமையுடன் சொல்லிக் கொள்ளுமளவு அருமையான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய மொத்த சினிமா கேரியரிலும் இந்தப் படம் ஐஸ்கிரீமில் வைத்த செர்ரியாக என்றென்றும் நிலைத்திருக்கும். அதிலும் “அமரன் ” படம் கொடுத்த வெற்றிக்கு இந்த படம் இன்னும் மிகப்பெரிய நியாயம் செய்திருக்கிறது. நடிப்பிலும் பண்பட்ட நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார் . ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாகவே பல இடங்களில் தோன்றியிருப்பது அருமை.

தொடர்ந்து கவனம் பெறுகிறார் ரவி மோகன். அவருடைய நடிப்பு பட்டியலில் இந்த படம் நிச்சயம் மைல்கல். ஸ்டைலான வில்லன் தோற்றத்திற்கு கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். துரோகம், குரோதம், வன்மம் என அனைத்தையும் முகத்தில் கொண்டு வந்தது சிறப்பு. துறுதுறு வாலிபனாக அதர்வா நடிப்பும் சோடை சொல்ல முடியாத நடிப்பு.
ஶ்ரீலீலா தென்னிந்தியாவின் ட்ரெண்டிங் கேர்ள், டான்சிங் டால் இந்தப் படத்தில் இன்னும் ஒருபடி மேல் சென்று நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக தமிழே தெரியாமல் சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் செய்து உணர்வுபூர்வமாக தாய்மொழி குறித்து அவர் பேசும் வசனம் மனதில் நிற்கும். தமிழில் மிகச் சிறந்த அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்கிறது. சேத்தன், குரு சோமசுந்தரம் என ஒவ்வொருவரும் அவரவர் பங்கை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கான கடமையை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த படம் வெறும் சினிமா பொழுதுபோக்கு அல்ல அதையும் தாண்டிய ஒரு வரலாறு, தமிழ் உணர்வு, ஏராளமான உண்மைச் சம்பவங்கள் என அனைத்தையும் சில பல நெருக்கடிகளுக்கு நடுவில் பதிவு செய்ய வேண்டும். கொஞ்சம் தப்பினாலும் சார்பு நிலை வந்துவிடும் அல்லது அரசியல் சாயம் பூசப்பட்டுவிடும். அத்தனைக்கும் தாக்குப்பிடித்து அற்புதமாக திரைக்கதையைக் கொடுத்திருக்கிறார் சுதா.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் சப்தமிட்டு வரும் ரயில், அதன் வெளிச்சம், என அங்கே இருந்தே நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார். ஜி. வி.பிரகாஷ் குமார் இசை அனலாகத் தெறிக்கிறது. பாடல்களும் ட்ரெண்டிங் ரகம். சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இரண்டாம் பாதியில் எங்கும் தீ பரவுகிறது. தணிக்கை குழு ஏராளமாகக் கட் கொடுத்து, சில வசனங்களை அமைதியாக்கியும் கூட திரைக்கதையின் நோக்கம் எங்கேயும் தடைப்படவில்லை. சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா காதல் காட்சிகள் மட்டும் திரைக்கதைக்கு சின்னத் தடையாக நிற்கின்றன.

ட்ரெய்லரில் பார்த்த சில வசனங்கள், அண்ணாவின் கேமியோ என ஒரு சில காட்சிகள் சென்சார் தரப்பில் வெட்டுப்பட்டாலும், 25 வருட தமிழ் சினிமா செய்யாத ஒரு செயலை நிறைவேற்றி இருக்கிறது இப்படம். இக்கால தலைமுறைக்கு தாய்மொழி அடையாளம் என்பதும் சிந்திக்க தாய்மொழி மட்டும்தான் உதவும் என்பதையும் இந்த படம் அழுத்தமாகவே பதிவு செய்கிறது.

மொத்தத்தில் அறிவு வளரவும், ஆழமாக சிந்திக்கவும் தாய் மொழி தான் உதவும். ஒரு மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழி அதை அழிக்க நினைத்தால் அவனது அறிவையே அழிக்க நினைப்பதற்கு சமம் என சொல்லிய விதத்தில் இது தமிழுக்கு மட்டுமல்ல இந்தி மொழியால் நடுக்கப்பட்ட அனைத்து மொழிக்கும் பொதுவாக மாறியிருக்கிறது ” பராசக்தி “.
Rating: 



(3.75/5)












