Download App

பிரமாண்டமாக உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

December 17, 2025 Published by Natarajan Karuppiah

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் அவர்கள், ‘45’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்திய திரை ரசிகர்கள் இதுவரை திரையில் பார்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்து செல்லும் டிரெய்லர், கதாப்பாத்திரங்களின் அசத்தலான அறிமுகங்களுடன், எம் ஜி ஆரின் ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் எனும் பாடலுடன் ரசிகர்களை அசத்துகிறது.

டிரெய்லரை வெளியிட்ட காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் பேசுகையில்,‘45’ திரைப்படம் காவல் துறைக்கு நல்ல செய்தியைக் கூறுகிறது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால், படம் வசூலில் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று, ‘45’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. ‘45’ அனைவராலும் கொண்டாடப்படும்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் அர்ஜுன் ஜான்யா பேசுகையில்,

“சிவண்ணா (சிவராஜ்குமார்) என்னை இயக்குநராக முயற்சி செய்ய ஊக்குவிக்கவில்லை என்றால், இன்று நான் இங்கே நிற்க முடியாது. உபேந்திரா ஒரு இயக்குநர் ஐகான்; அவரது நிழலில் வளர்ந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன். இன்றைய காலத்தில் நாம் மறந்துவிடப்பட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களை இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. அவற்றை உணர்ந்தால் நம் ஒவ்வொரு இல்லமும் ஒளிரும். இந்த படத்தில் மூன்று ஹீரோக்களுடன் சேர்த்து, நான்காவது ஹீரோ தயாரிப்பாளர்தான். அவரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.

டாக்டர் சிவராஜ்குமார் பேசுகையில்,

“‘45’ என் 129வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் – அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்”. நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்றார்.

நடிகர் உபேந்திரா பேசுகையில்..,

“இந்த படத்திற்கு திரைக்குப் பின்னால் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதலாவது தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, இரண்டாவது இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, மூன்றாவது ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே. சிவராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. ‘ரசிகர்களே கடவுள்’ என்று கூறிய டாக்டர் ராஜ்குமாரை நினைவுகூர வேண்டிய தருணம் இது. டாக்டர் குவெம்பு எழுத்தில் கடவுளைக் கண்டுள்ளார். டாக்டர் சிவராம கரந்த் இயற்கையில் கடவுளைக் கண்டுள்ளார்” என்றார்.

ராஜ் B. ஷெட்டி பேசுகையில்,

“நான் சிவராஜ்குமார் மற்றும் உப்பேந்திராவின் ரசிகன். என் சமீபத்திய படம் ‘சு ஃப்ரம் ஸோ’ மூலம் லாபமாக பெற்ற முதல் ஆயிரம் ரூபாயை, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் வீதம் வழங்கினேன். ‘45’ படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகை சுதாராணி, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறினார். நடிகர் பிரமோத் ஷெட்டி, “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றார். ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக் காத்திருக்கும் ‘45’ திரைப்படம், 01-01-2026 அன்று, திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Now