சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து மழை!
December 12, 2025 Published by anbuselvid8bbe9c60f

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மாமனிதர், உலகளாவிய ரசிகர் பட்டாளத்தின் அபிமான நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை இனிதே கொண்டாடுகிறார்.
50 ஆண்டுகளைக் கடந்து திரையில் இளமையையும் உற்சாகத்தையும் தக்க வைத்திருக்கும் ரஜினிக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் திரண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதில் சிறப்பம்சமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்:
“திரு ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது அசாத்திய நடிப்பாற்றல் பல தலைமுறைகளை வசீகரித்து, பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு வகையான பாத்திரங்களையும் பாணிகளையும் தாண்டி அவர் படைத்த திரைப்படங்கள் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றன. இந்த ஆண்டு திரைத்துறையில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு வாழ அவருக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் அவரது புகைப்படத்துடன் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, இரத்ததான முகாம்களை நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2′ படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் ரஜினி, இன்று ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 75… ஆனாலும் இன்னும் ட்ரெண்டிங் ஹீரோ தான்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலையவரே!



















