Download App

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் முதல் சக நடிகர்கள் வரை வாழ்த்து அலை!

December 12, 2025 Published by anbuselvid8bbe9c60f

rajinibday

தமிழகமே தலைவரின் பிறந்தநாளை கொண்டாட்ட மயமாக மாற்றியிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர், சக நடிகர்கள் என அனைத்துத் தரப்பையும் சேர்ந்த பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உருக்கமான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்: “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!”

முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: “இன்று பிறந்த நாள் காணும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் @rajinikanth சாருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் அவர்களின் அன்புக்குரியவர் – தலைவர் @mkstalin அவர்களின் அருமை நண்பர் – என் மீதும் எப்போதும் தனிப்பாசம் கொண்டிருப்பவர். 75-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்து, பவள விழாவையும் – திரையுலகில் பொன் விழாவையும் காணும் ரஜினி சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். இந்திய திரையுலகில் அன்றைக்கும் – இன்றைக்கும் முன்வரிசையில் ஒளிரும் #SuperStar ரஜினி சார், தொடர்ந்து நம்மை மகிழ்விக்கட்டும். அவர் இன்னும் பல்லாண்டு நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ந்திருக்க விழைகிறேன். #HBDRajinikanth”

rajinibday1

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!”

திமுக எம்.பி. கனிமொழி: “தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.”

நடிகர் கமல்ஹாசன்: “75 வருடங்கள் சிறப்பான நினைவுகூறத்தக்க வாழ்க்கை. 50 வருட சினிமா புகழ். பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த்.”

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு, தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

rajinibday2

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.”

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒரே குரலில் ஒலிக்கும் வாழ்த்துகள்… இதுதான் தலைவரின் செல்வாக்கு, தலைவரின் மகத்துவம்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Trending Now