டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: வெளியான பரபரப்பு தகவல்கள்!
December 13, 2025 Published by Natarajan Karuppiah

பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிறகடிக்க ஆசை’, ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள இவர், குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ராஜேஸ்வரி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் அம்மா கதாபாத்திரத்திலும், ‘பாக்கியலட்சுமி’ தொடரில் தோழி கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர், சதீஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கணவருடன் கருத்து வேறுபாடு: ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து படப்பிடிப்புகளுக்குச் சென்று வந்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ராஜேஸ்வரி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்த மன உளைச்சல் காரணமாக, அவர் தனது தாயார் வீட்டில் இருந்தபோது அதிகப்படியான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ராஜேஸ்வரியின் மரணத்திற்கான முழுமையான மற்றும் உறுதியான காரணம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகை ராஜேஸ்வரியின் திடீர் மறைவு, சின்னத்திரையில் அடுத்தடுத்து நிகழும் துயரச் சம்பவங்களின் தொடர்ச்சியாக அமைந்து திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




















