ரத்ன குமார் படத்துக்குக் கைகோர்த்த கார்த்திக் சுப்பாராஜ் – லோகேஷ் கனகராஜ்!
December 8, 2025 Published by Natarajan Karuppiah

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களான கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் (Stone Bench Films) மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்க்வாட் (G Squad) ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இந்த திரைப்படத்தை, ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ படங்களை இயக்கியவரும், லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை/வசனத்தில் பணியாற்றியவருமான இயக்குநர் ரத்ன குமார் இயக்கவுள்ளார்.
தரமான மற்றும் புதுமையான திரைப்படங்களை தயாரிப்பதில் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜி ஸ்க்வாட் நிறுவனங்கள் ஏற்கெனவே அறியப்பட்டவை. தற்போது இந்த இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து, ரத்ன குமார் இயக்கத்தில் ஒரு புதிய படைப்பை உருவாக்கவுள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மெகா கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















