Download App

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து: காலில் பலத்த காயம்!

தை 8, 2026 Published by anbuselvid8bbe9c60f

killer1

பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார். ‘கில்லர்’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.

ஏஞ்சல் ஸ்டூடியோஸ் மற்றும் கோகுலம் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் எஸ்.ஜே.சூர்யாவின் கனவுத் திரைப்படமாக உருவாகி வருகிறது. கதையில் காருக்கு முக்கிய பங்கு இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் சிறப்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான்-இந்திய படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் நடந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. கயிறு கட்டி சண்டைக் காட்சியில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, கீழே இறங்கும் போது கம்பிகள் காலில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு காலில் 2 தையல்கள் போடப்பட்டன.

killer

மருத்துவர்கள் 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், தற்போது எஸ்.ஜே.சூர்யா ஓய்வில் உள்ளார். இதனால் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரது விரைவான குணமடைதலை வாழ்த்தி வருகின்றனர்.

‘கில்லர்’ படத்தின் மூலம் இயக்குநராக திரும்பும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இந்த விபத்து படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Trending Now