‘துருவ நட்சத்திரம்’ விரைவில் வெளியீடு: பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதி!
தை 6, 2026 Published by anbuselvid8bbe9c60f

நீண்ட காலமாக ரசிகர்களை ஏமாற்றி வந்த விக்ரம் நடிப்பிலான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும்” என்று கூறியுள்ளார். மேலும், அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதி முடித்துவிட்டதாகவும், அதைத் தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கன்னடத்தைத் தவிர மற்ற மொழிகளில் பணிபுரிந்துவிட்டதாகக் கூறிய அவர், தற்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு கதை கூறியுள்ளதாகவும், அது விரைவில் அடுத்த கட்டத்துக்கு நகரும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நீண்ட ஆண்டுகளாக நிதி சிக்கல்கள் காரணமாக வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது. படம் தயாரான பிறகு அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் கவுதம் மேனன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘துருவ நட்சத்திரம்’ ஸ்பை திரில்லர் வகையைச் சேர்ந்தது என்பதால், விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் அவதாரத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!





















