ரவி மோகன் வெளிப்படையான பேச்சு: “சுயமரியாதையை மட்டும் இழக்கக் கூடாது”
தை 6, 2026 Published by anbuselvid8bbe9c60f

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட அரசியல் ஆக்ஷன் டிராமா ‘பராசக்தி’ ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் ரவி மோகன், “பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் ‘பராசக்தி’. இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் தொடங்கி இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய மேடை ஏற வேண்டும், ரசிகர்கள் அதற்கு கூடவே இருக்க வேண்டும்.
பொதுவாக நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் பெண் பாதுகாப்பாக உணர்வார் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக இயக்குநர் சுதா கொங்கரா இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது பெரிய வெற்றியைத் தரும்.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்ததற்கு சுதாவின் கதை மற்றும் சுதா தான் காரணம். இப்போது அந்த முடிவு குறித்து எந்த கவலையும் இல்லை, மகிழ்ச்சியாகவே உள்ளது. இனிமேல் என்னை வில்லனாகவே பார்ப்பீர்கள்.
இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகிற படம். நானும் என் வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் கவலை. சுயமரியாதையை மட்டும் இழக்கக் கூடாது. அதை மனதில் வைத்தால் நல்ல மனிதனாக வாழ முடியும்” என்று உருக்கமாகப் பேசினார்.
ரவி மோகனின் இந்தப் பேச்சு விழாவில் பெரும் கைத்தட்டலைப் பெற்றது. 1965 ஆண்டு ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய இப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பராசக்தி’ ஜனவரி 10 அன்று உலகமெங்கும் வெளியாகிறது!






















