Download App

‘படைத்தலைவன்’ ரிலீஸ் நாளில் கண்ணீருடன் பேட்டியளித்த கேப்டன் வாரிசுகள்..!

June 13, 2025 Published by Natarajan Karuppiah

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சண்முக பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் விஜய பிரபாகரன் ஆகியோர் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது சண்முக பாண்டியன் கூறுகையில், “இந்த படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள். நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று  சொல்லுங்கள். அதற்கப்புறம் மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்,” என்று கண்ணீருடன் கூறினார்.

அதன் பிறகு  விஜய பிரபாகரன்  பேசினார்.  எனது தம்பியின் கண்ணீருக்கு ஒரு காரணம் இருக்கிறது. சண்முக பாண்டியன் 2013 ஆம் ஆண்டு நடிக்க வந்தார். 12 வருஷம் கழித்து இன்றுதான் மூன்றாவது படம் ரிலீஸ் ஆகிறது. கேப்டன் உடல்நிலை சரியில்லாத போது, ‘எனக்குப் படமும் வேண்டாம், எதுவும் வேண்டாம், அப்பாவை நன்றாக குணப்படுத்தி மக்கள் முன் நிறுத்த வேண்டும்’ என்பதிலேயே குறியாக இருந்தார். அதனால் தான் அவர் எந்தப் படமும் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை.”

“கேப்டன் உங்கள் சொத்து. நான் எல்லா மேடையிலும் சொல்வதுதான், கேட்பது எங்கள் உரிமை, கொடுப்பது உங்கள் கடமை. சண்முக பாண்டியனை கொண்டாடுங்கள். எங்கள் அப்பா எங்களை உங்களுக்காகத்தான் விட்டுச் சென்று இருக்கிறார். மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்,” என்று தெரிவித்தார்.