Download App

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ நினைவுகள்!

December 9, 2025 Published by Natarajan Karuppiah

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தனது திரைப் பயணத்தில் 1999-ல் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சமீபத்தில் மனம் திறந்துள்ளார். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘படையப்பா’ திரைப்படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, மறக்க முடியாத வில்லி கதாபாத்திரமான நீலாம்பரி குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:

“நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய்தான் சரியானவர் என்று நினைத்தேன். அவர் அப்போது பிஸியாக இருந்ததால், அவரது கால்ஷீட்டுக்காக கிட்டத்தட்ட 3 முதல் 4 மாதங்கள் வரை அலைந்தோம். உறவினர்கள் மூலமும் முயற்சித்தோம். அவருக்கு கதை பிடித்தால் 2-3 ஆண்டுகள் காத்திருந்து கூட ஷூட்டிங்கைத் தொடங்கலாம் என்று நான் தீர்மானித்தேன். பின்னர் அவருக்கு விருப்பமில்லை எனத் தெரிந்ததால், அந்த முயற்சியை நாங்கள் கைவிட்டோம்.”

தான் நடித்துள்ள பல படங்கள் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகி வரும் நிலையில், ‘படையப்பா 2’ குறித்து பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

“‘2.0′, ‘ஜெயிலர் 2′ என இரண்டாம் பாகப் படங்கள் பண்ணும்போது, ஏன் ‘படையப்பா 2’ பண்ணக்கூடாது என்று தோன்றியது. ‘அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்னை பழிவாங்காம விடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனாள் நீலாம்பரி. அதனால், ‘நீலாம்பரி: படையப்பா 2’தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய திருவிழாவாக இருக்கும்.”

‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், ரஜினிகாந்தின் இந்தக் கருத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலாம்பரியின் பழிவாங்கும் படலத்தை மையமாகக் கொண்ட ‘நீலாம்பரி: படையப்பா 2’ உருவாகும் பட்சத்தில், அது நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரம்மாண்ட படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.