Download App

மூன்று வயது குழந்தை கண்டெடுத்த வரலாற்றுப் புதையல்!

வைகாசி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

இஸ்ரேலில் குடும்பத்துடன் பிக்னிக் சென்றிருந்த  மூன்று வயது குழந்தை ஒரு பழங்காலப் புதையலை கண்டுபிடித்திருக்கிறாள். 
இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ்வுக்கு தென்கிழக்கில் சுமார் 50 மைல் தூரத்தில் அமைந்த டெல் அஸேக்கா என்ற தொல்பொருள் ஆராய்ச்சிக் களத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த மூன்று வயது ஸிவ் நிட்ஸன் சுமார் 3800 வருடங்களுக்கு முன் கானானிய சமூகத்தினர் பயன்படுத்திய ”சாணவண்டு வடிவ முத்திரை” ஒன்றை கண்டெடுத்ததாக இஸ்ரேல் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிறிஸ்தவர்களின் வேதாகமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெல் அஸேக்கே, பன்னெடுங்கால குடியிருப்புப் பகுதிகளின் இடிபாடுகளால் உண்டான சிறிய குன்று என்பது குறிப்பிடத் தக்கது. எகிப்தியர்கள் சாணவண்டை, புனிதப் பொருளாகவும்,”சிருஷ்டிப்பின் சின்னமாக” அல்லது கடவுளாக”வும் கருதினார்கள் என்பது வரலாற்றுத் தகவல். 
மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த ஸிவ் நிட்ஸன் சாணவண்டு வடிவ  முத்திரையை எடுத்து வந்து மற்றவர்களிடம் காட்ட, அது “ மிகவும் வித்தியாசமாக இருந்ததால்,” அதை குழந்தையின் பெற்றோர் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகக் கூறினர்.
பழங்கால முத்திரைகள், நாணயங்கள் போன்றவற்றைக் கண்டறியும் நிபுணரும், ஜெருசலேமிலுள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் எகிப்திய தொல்லியல் பிரிவின் பொறுப்பாளருமான டாஃப்னா பென் -டர், அந்த சிறிய புதையல் கி.மு 2100க்கும் 1600 க்கும் இடைபட்ட காலத்தில் வெண்கல யுகத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று தீர்மானித்தார். கிழக்கு மத்திய தரைகடல்பகுதியை ஒட்டியுள்ள இன்றைய சிரியா மற்றும் லெபனான் இவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக நம்பப்படும் ‘லெவாந்த்’ என்ற இடத்தில் கானானிய கலாச்சாரம் ஓங்கி இருந்தது,  இந்த வெண்கல யுகத்தில் தான். 
“இந்த காலகட்டத்தில் சாணவண்டு வடிவ சின்னங்கள் பயன்படுத்தப் பட்டது உண்மை தான். அவை கல்லறைகளிலும், பொது கட்டிடங்களிலும், வீடுகளிலும் கூட காணப்பட்டன . சில சமயங்களில் அவை மத நம்பிக்கை அல்லது அந்தஸ்தை குறிக்கும் சின்னங்களாக பயன்பட்டன” என்கிறார் பென் -டர்.
நிட்ஸன் இங்த முத்திரைய எடுத்த அதே இடத்தில் இதற்கு முன்பு இரும்பு யுகத்தைச் சேர்ந்த கோட்டை சுவர்களின் பகுதிகள், யூத ராஜ்யத்தில் பயன்படுத்தப் பட்ட விவசாயக் கருவிகள் ஆகியவை கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அங்கு தொல்லியல் ஆராய்ச்சியை நடத்திய டெல் அவிவ் பல்கலைகழகப் பேராசிரியர் ஓபேத் லிப்ஸ்சிட்ஸ்,”  நாங்கள் இந்த பகுதியை 15 வருடங்களாக ஆய்வு செய்கிறோம். இங்கு கண்டுபிடிக்கப் பட்ட பொருட்கள் இடைக்கால வெண்கல யுகத்தையும், அதன் இறுதி பகுதியையும் சார்ந்தவை என்று தெரிகிறது. இந்த காலகட்டத்தில் யூதேயாவின் தாழ்நிலங்களில் மிகச் செழிப்பாக இருந்த இடங்களில் டெல் அஸேக்காவும் ஒன்று. இந்த குழந்தை கண்டு எடுத்த முத்திரை இங்கு ஏற்கனவே எடுக்கப் பட்ட ஏராளமான எகிப்திய, கானானிய தொல்பொருள்களில் அணிவகுப்பில் இடம் பெறுகிறது. இந்த காலக் கட்டத்தில் எகிப்தியருக்கும் கானானியருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது இதனால் தெளிவாகிறது என்றார் அவர். 
அந்த சாணவண்டு முத்திரை இஸ்ரேலிய தொல்லியல் அருங்காட்சியகத்தில் யூதர்களின் பஸ்கா பண்டிகைக்குப் பிறகு, காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.